தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பருவ மழைக்காலத்தில் தடையில்லா மின்சாரம்; அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்..! - SENTHIL BALAJI

பருவ மழைக்காலத்தில் சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மின் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு கூட்டம்
அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு கூட்டம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2024, 3:44 PM IST

சென்னை:மின் தடங்கல் தொடர்ச்சியாக ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்யவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் பருவ மழைக்காலம் மற்றும் எதிர் வரும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

அதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; தமிழ்நாடு முழுவதும் 6,68,225 ஒருங்கிணைந்த சிறப்பு பராமரிப்பு பணிகள் திட்டமிடப்பட்டு, கடந்த ஜூலை 1ந் தேதி முதல் அக்டோபர் 15ந் தேதி வரை மொத்தமாக 13,73,051 சிறப்பு பராமரிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதிலும், , 47,380 மின்கம்பங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன, சாய்ந்த நிலையில் இருந்த 33,494 மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன. புதியதாக 27,329 மின் கம்பங்கள் இடையில் பொருத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரர்'... சீமானுக்கு விஜய் வாழ்த்து..! நெகிழ்ச்சியில் தவெக தொண்டர்கள்..!

2,17,775 இடங்களில் பலவீனமான இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. 41,508 இடங்களில் மின்கம்ப தாங்கு கம்பிகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. பழுதடைந்த 7,118 இடங்களில் பில்லர் பாக்ஸ்கள் சரிசெய்யப்பட்டுள்ளன, இதுதவிர்த்து சுமார் 2,927 கி.மீ. பழைய மின்கம்பிகள் புதியதாக மாற்றம் என 13,73,051 சிறப்பு பராமரிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

மின் பகிர்மான வட்டம் வாரியாக விரிவான ஆய்வினை மேற்கொண்ட மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வட்ட அளவில் அதிக அளவு மின் தடைகள், மின்மாற்றிகள் பழுது மற்றும் புகார்கள் கொண்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் பணிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இருக்கக்கூடிய துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகள் ஆகியவற்றில் உரிய முறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தனிக்கவனம் செலுத்தி மின்நுகர்வோரிடமிருந்து வரும் புகார்களை குறைப்பதற்கு தக்க நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆய்வின் போது, 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும் அதற்கான காரணத்தை அந்தந்த அலுவலர்களிடம் மின்துறை அமைச்சர் கேட்டறிந்து, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்யுமாறும், பொதுமக்களிடமிருந்து சமூக வலைதளங்கள் மூலமாக பெறப்படும் புகார்கள் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார். இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

புகார் எண்: மின் சேவைகள் மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details