சென்னை: இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று புனித ஹஜ் யாத்திரை. துல் ஹஜ் மாதத்தில் இந்த கடமையை நிறைவேற்ற முஸ்லீம்கள் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு செல்வது வழக்கம். அதன்படி புனித ஹஜ் பயணத்திற்காக முதல் ஹஜ் விமானம் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியா ஜித்தா நகருக்கு 170 பெண்கள் உள்பட 326 பேருடன் நேற்று இரவு புறப்பட்டுச் சென்றது.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்கள் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) புனித பயணம் செல்பவர்களை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, ஹஜ் கமிட்டி செயலாளர் ஏம்.ஏ. சித்திக், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹாரீஸ் தக்கார், சிறுபான்மை ஆணைய துணை தலைவர் இறையன்பு குத்துஸ் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். சென்னையில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 5470, புதுச்சேரியை சேர்ந்த 61, அந்தமான், நிக்கோபர் தீவைச் சேர்ந்த 131 உள்பட 5688 பேர் 17 விமானங்களில் புனித பயணம் செய்கின்றனர்.
மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த 276 பேர் பெங்களூரூ, மும்பை, ஐதராபாத், கொச்சி, கோழிக்கோடு விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்கின்றனர். முன்னதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "புனித ஹஜ் பயணத்திற்காக தமிழ்நாட்டில் இருந்து 5746 பேர் செல்கின்றனர். அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறோம்.
9ஆம் தேதி வரை ஹஜ் விமானம் செல்கிறது, கடந்த ஆண்டை விட இந்தாண்டு ஆயிரம் பேர் அதிகமாக செல்கின்றனர். முதலமைச்சர் வழங்கிய ரூ.10 கோடி நிதியை அனைவருக்கும் பிரித்து வழங்கப்பட்டு உள்ளது. புனித யாத்திரைகள் வழிகாட்டுதலுக்காக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் முடிந்து பிறகு இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்" என்று கூறினார். ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது கூறுகையில், "கடந்த ஆண்டை இந்தாண்டு அதிகமானவர்கள் ஹஜ் யாத்திரை செல்கின்ரனர். 7500க்கும் அதிகமானவர்கள் ஹஜ் செல்ல விண்ணப்பித்திருந்த நிலையில், 5700 பேருக்கும் மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது. 2800 பேர் தனியார் முலம் ஹஜ் பயணம் செல்கின்றனர்.
ஹஜ் தலைவர் பொறுப்பை முதலமைச்சர் வழங்கிய பின்னர் ஹஜ் பயணம் செல்பவர்களை வழியனுப்பி வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இஸ்லாமியர்களுக்கான நிதியை அதிகரிக்க வலியுறுத்தி வருகிறோம். வக்பு வாரியத்திற்கான நிதியை ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி முதலமைச்சர் வழங்கியுள்ளார். முதலமைச்சர் ஹஜ் யாத்திரை மானியத்தை உயர்த்தி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்லாமியர்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆவணம் செய்யும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது வழக்குப்பதிவு; தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல லட்சம் சுருட்டியது அம்பலம்! - AIADMK EX MLA SATHYA