சென்னை:வடசென்னை பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் பெரம்பூர், ஓட்டேரி சந்திப்பு ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "2022ஆம் ஆண்டு தமிழ்நாடு பேரிடர் காலத்திலும், பருவமழையின் போதும் ஏற்படுகின்ற இயற்கை சீற்றத்தை சமாளிப்பதற்கு முன்கூட்டியே திட்டமிடல் என கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து எடுத்து வருகிற நடவடிக்கை காரணமாக ஆண்டாண்டுக்கு தண்ணீர் தேக்கம் என்பது பருவமழை காலங்களில் குறைந்து வருகிறது.
அந்த வகையில், இன்றைக்கு மெட்ரோ ரயில் பணிகள் பல இடங்களில் நடைபெற்று வரக்கூடிய நிலையில், புதிய ரயில் பாதை அமைக்கின்ற பணி எங்கெல்லாம் நடைபெற்று வருகிறதோ, அப்பகுதியில் கால்வாய்கள் வருகிறது என்றால், அதற்கு மாற்று ஏற்பாடாக மழைநீர் வடிகால் பணிகளை குறுகிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, அதிகாரிகளுடனும், மேயருடனும் ஒருங்கிணைந்து ஆய்வினை மேற்கொண்டு இருக்கிறோம்.
குறிப்பாக, ஓட்டேரி கால்வாய் அமைந்துள்ள பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளால் ஒரு குறிப்பிட்ட 250 மீட்டருக்கு பழைய கால்வாயை நீக்க வேண்டிய சூழல் உள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக இரண்டு மீட்டர் விட்டம் கொண்ட கான்கிரீட் கற்களால் ஆன ஒரு பழுப்பையும் தொடர்ந்து, அதை இணைக்கின்ற ஒரு மழை நீர் கால்வாயில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அதனை இன்று ஆய்வு செய்தோம்.