தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சுவாமிமலை கோயிலில் பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டதா?" - அமைச்சர் சேகர்பாபு விளக்கம் - SWAMIMALAI MURUGAN TEMPLE

சுவாமிமலை முருகன் கோயில் வளாகத்தில் தூங்கிய பக்தர்களை கோயில் நிர்வாகிகள் தண்ணீர் ஊற்றி விரட்டியதாக இணையத்தில் பரவிய வீடியோ காட்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு (Credits - minister P.K. Sekar Babu x page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2024, 10:56 PM IST

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திருவான்மியூர், மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "மக்கள் நலத் திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது. 22,000 மாணவர்கள் உயர்கல்வி படிப்பவர்கள் இந்த துறையின் சார்பில் பயின்று வருகிறார்கள்.

அதேபோல் திருவிளக்கு பூஜை என்று எடுத்துக் கொண்டால் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 47 ஆயிரம் சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்று பலனடைந்துள்ளனர். இப்படி எண்ணிலடங்கா திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பொருளாதாரத்தில் நலிவுற்று இருப்பவர்கள், இறை நம்பிக்கையோடு திருக்கோயில் சார்பில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நம்பிக்கையோடு இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கடந்த 2022-2023ம் ஆண்டு முதன்முதலாக 500 ஜோடிகளுக்கு முதலமைச்சர் திருமணம் செய்துவைத்தார்.

2023-2024ம் ஆண்டு திருமணங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், 500 ஜோடிகள் என்பதை 600 ஜோடிகளாக முதலமைச்சர் மாற்றினார். இன்று 2024-2025 சட்டப்பேரவை அறிவிப்பில், 700 ஜோடிகளுக்கு என்று அறிவித்தார் முதலமைச்சர்.

இந்த 700 ஜோடிகளில் 31 ஜோடிகளுக்கு இன்று முதலமைச்சர் திருமணம் செய்து வைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று 379 ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளது. துறை சார்ந்த பணிகளில் அறத்தையும் ஒருங்கிணைத்து அறநிலையத்துறையாக மிலிர்வது திராவிட மாடல் ஆட்சியில் தான்.

இதையும் படிங்க :சுவாமிமலை வளாகத்தில் தூங்கிய பக்தர்கள்! தண்ணீர் ஊற்றி விரட்டியதாக குற்றச்சாட்டு; அதிகாரி விளக்கம்!

சுவாமிமலை கோயிலில் பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது தொடர்பான கேள்விக்கு, சுவாமிமலை கோயிலில் பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றப்படவில்லை. விழா காலங்களில் கோயில்களில் யாரும் தங்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.

இரவில் நடை அடைக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு நாளும் இதுபோன்ற திருவிழா காலங்களில் சுத்தம் செய்வது ஏற்கனவே நடைமுறையில் உள்ள மரபுதான். அதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரவு அனைத்து பூஜைகளும் நடந்த பிறகு அடுத்த நாள் காலை பூஜை வழக்கம் போல் தொடங்க வேண்டும் என்பதற்காக தண்ணீர் பாய்ச்சி சுத்தம் செய்கின்ற பணிதான் நடைபெற்றது.

பக்தர்கள் யார் மீதும் தண்ணீர் அடிக்கும் நிகழ்வு நடக்கவில்லை. இப்படி ஏதாவது கிடைக்குமா என்று திரித்துக் கூறுவதற்கு கங்கணம் கட்டி செயல்படுபவர்கள் இந்தப் பொய்களை பரப்புகிறார்கள். உண்மை எப்போதுமே உறங்க செல்லாது. உண்மை இரண்டு நாள் மூன்று நாள் வேண்டுமென்றால் மறைவில் இருக்கலாம். ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும். சுவாமிமலையில் பக்தர்கள் மீது எந்தவிதமான அட்ராசிட்டியும் நடைபெறவில்லை" என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details