சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மூலமாக பெறப்படும் திட்ட அனுமதி விண்ணப்பங்கள், இணையவழி சேவை மூலமாக பெறப்படுவதால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விண்ணப்பங்கள் பெறப்படுவது இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளது என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது, “சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) இணையவழி சேவையில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இவை ஒற்றை சாளரமுறை அடிப்படையில் இணையவழி (Single Window Online Planning Permission Application System) திட்ட அனுமதி மென்பொருளை உருவாக்கி, மே 2022ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும மனைப் பிரிவிற்கான திட்ட அனுமதி இணையவழி சேவை, இணையவழி திட்ட அனுமதி பயிற்சி காணொளி, திட்ட அனுமதி மென்பொருள் தடையில்லா சான்றிதழ் வழங்கும் 12 துறைகளான, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL), பொதுப்பணித்துறை (PWD), நீர்வள ஆதாரத்துறை (WRD), தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB), எல்காட் நிறுவனம் (ELCOT), வனத்துறை (Forest), புவியியல் மற்றும் சுரங்கத் துறை (Geology & Mines), சிட்கோ (SIDCO), நெடுஞ்சாலைத்துறை (State Highways), தெற்கு ரயில்வே (Southern Railway), மாவட்ட நிர்வாகம் (Collectorates) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை (DFRS) ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, கூர்ந்தாய்வு செய்யப்படும் திட்ட அனுமதி சேவைகள் கடந்த நவம்பர் 17, 2023ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு, சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் திட்ட அனுமதி மென்பொருள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான, பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் (DMA), ஊரக உள்ளாட்சி அமைப்புகளான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (RDPR), பேரூராட்சிகள் இயக்ககம் (DTP) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் பதிவு செய்யப்பட்ட கட்டட வல்லுநர்கள், கட்டடப் பொறியாளர்கள் மற்றும் அபிவிருத்தியாளர்களுக்கு இணையதள திட்ட அனுமதி விண்ணப்பம் சமர்ப்பிப்பது, கையாளுவது தொடர்பாக, மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மூலம் பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு, அமைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட, பல்வேறு நேர்முக பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.