சென்னை: நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இன்று நடைபெற்ற 4ஆம் நாள் அமர்வு சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி, கொங்கராயகுறிச்சியில் உள்ள வீரபாண்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த அரசு ஆவண செய்யுமா எனவும், கைலாசநாதர் திருக்கோயிலில் சித்திரை மாதம் திருவிழா நடைபெற உள்ளதால், தேரோட்டம் நடத்த ஏதுவாக புதிய தேர் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா எனவும் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வீரபாண்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு 8 சன்னதிகள் உள்ள நிலையில், 8 சன்னதிகளுக்கும் தொல்லியல் துறை, மண்டல மற்றும் மாநிலக் குழு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், வரும் மார்ச் 5ஆம் தேதி பாலாலயம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.