சென்னை:நாடு முழுவதும் இன்று (ஜன.30) மகாத்மா காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி இன்று தமிழ்நாடு ஆளுநர் ரவி, காந்தி நினைவு நாளை அர்த்தமற்ற வகையில் தமிழ்நாடு அரசு அனுசரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், '' மகாத்மா காந்தி நினைவு நாளை அரசியலாக்குவதைத் தவிர்த்து, மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்க கவனம் செலுத்துங்கள் ஆளுநரே'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.
அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
'' மகாத்மா காந்தியின் நினைவு தினம் நடத்துவது தொடர்பாக ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். "காந்தி மண்டபத்தில் காந்தி நினைவு நிகழ்வை நடத்தாமல் அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?’’ என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பாரம்பரியமாக, காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்புகள் மெரினா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், மெரினா கடற்கரை சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், 2022-ஆம் ஆண்டு தமிழக அரசு எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திற்குள் மகாத்மா காந்தியின் புதிய சிலையை நிறுவியது. அன்று முதல் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்புகள் இரண்டும் எழும்பூர் அருங்காட்சியக காந்தி சிலை முன்புதான் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டுகளில் எழும்பூரில் நடந்த இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
பாரம்பரியமிக்க எழும்பூர் அருங்காட்சியகத்தின் வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். பாந்தியன் சாலையை ஒட்டியிருக்கும் அந்த அருங்காட்சிகத்தின் பிரதான நுழைவு வாயில் முன்பு இருக்கும் காந்தி சிலை முன்புதான் அஞ்சலி நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ஆளுநர் குறிப்பிடுவது போல அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடக்கவில்லை என்பதை முதலமைச்சர் அஞ்சலி செலுத்திய புகைப்படத்தை பார்த்தாலே தெரியும். பின்னணியில் பாந்தியன் சாலையும் மேம்பாலமும் புகைப்படத்தில் தெரியும். ஆனால், ஆளுநர் கண்களுக்கு வெறும் அவதூறுதான் தெரியும்.