சென்னை:நடப்பாண்டிற்கான (2024 - 2025) தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 26) நடைபெற்ற கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.
கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் துறையின் புதிய அறிவிப்புகள்:
- மதுரையில் பாரம்பரியமிக்க கவின் கலைகளைப் பயிற்றுவிக்கும் புதிய அரசு கவின் கலைக்கல்லூரி ரூ.4.79 கோடி செலவில் அமைக்கப்படும்.
- கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
- மாமல்லபுரம், அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியின் பழுதடைந்த பழைய கட்டடங்கள் ரூ.1 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
- தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணாக்கர்களுக்கு கணினிகள், அச்சு இயந்திரங்கள் மற்றும் பொறித்தல் இயந்திரம் (Etching Machine) கொள்முதல் செய்திட ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக மாணாக்கர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும், நிறுவப்பட்டுள்ள வளாகத்தில் சிலைகளைப் புதுப்பித்தலுக்கும் ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.