சென்னை: சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தொடர் தோல்வி விரக்தியில் தமிழகம் கொலை மாநிலமாக மாறிவிட்டதாக ஈபிஎஸ் குற்றம்சாட்டி வருகிறார். தமிழகம் கொலை மாநிலம் அல்ல, கலை மற்றும் அறிவுசார் மாநிலம். சமூக விரோதிகளை களை எடுக்கும் மாநிலம். ஆட்சியுடன் தொடர்புடைய கொலைச் சம்பவங்கள் எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லை.
அண்மையில் நடந்த 5 கொலைச் சம்பவங்களை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். அதில் ஒன்று புதுவையில் நடந்தது. மற்ற 4 கொலைச்சம்பவங்களும் சொந்த காரணங்களுக்காக நடந்த முன்விரோதக் கொலைகள். சட்டம் - ஒழுங்கு சீர்குலையும் அளவுக்கு எந்த கொலைச் சம்பவமும் தமிழகத்தில் நடக்கவில்லை.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்தபோது 4 கோடி மக்களுக்கு தலைவராக இருந்தார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 கோடி மக்களுக்கு தலைவராக இருக்கிறார். மக்கள்தொகை பன்மடங்கு உயர்ந்துள்ளது. எனவே மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரிப்பதை வைத்து பார்த்தால் கொலைச் சம்பவங்களும் அதிகமாகவோ, குறைவாகவோ தெரியலாம்.
எனவே, கொலைகளுக்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது. முன்விரோதத்தால்தான் கொலைகள் நடக்கின்றன. அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் கொலைகள் நடக்கிறது என கூற முடியாது என்பதால் அதை குறிப்பிட்டேன்.
ஆனாலும் யார் யாருக்கெல்லாம் முன் விரோதம் உள்ளது என்பதை எல்லாம் கண்டறிந்து வருகிறோம். காவல்துறை வசம் இருக்கும் ரவுடிகளின் பட்டியலைக் கொண்டு ரவுடிகளுக்குள் இடையே உள்ள முன்விரோதங்களை கண்டறிந்து தீர்த்து வைத்து வருகிறோம். கொலைகளை தடுக்க இவ்வாறான முன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் முதலமைச்சர்.
சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாலேயே இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழகம் உள்ளது. தொழிலதிபர்கள் தமிழகத்தை நாடி வருகின்றனர். தமிழகத்தை பின்னோக்கி தள்ள நினைக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு நிறைவேறாது.
ஏ,பி பட்டியலில் உள்ள ரவுடிகள் விசாரிக்கப்படுகின்றனர். காவல்துறையினரால் ரவுடிகள் எச்சரிக்கப்படுகின்றனர். கொலை செய்யப்பட்டு இறந்தவரின் முதல் ஆண்டு நினைவஞ்சலிக்குள் பழிவாங்கி விடுவேன் என்ற உணர்ச்சியில்தான் தற்போது கொலைகள் நடந்துள்ளன. இதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது. ஆனாலும் கொலைகளை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். ரவுடிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதால் 97 சதவீத சிறைகள் நிரம்பியுள்ளன.