சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் சாடினார். அதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சர் சட்டப்பேரவையில், சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட முன் மொழிந்த தீர்மானம் குறித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை குறித்தோ, அதை பாட்னா உயர் நீதிமன்றம் தடை செய்தது என்றோ முதலமைச்சர் எதுவும் பேசவில்லை. இந்த தனித் தீர்மானத்தை முன்மொழிந்து சமூக நீதி குறித்தும், மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் விரிவாக உரையாற்றினார்.
முதலமைச்சர் அவர்களின் உரை சட்டமன்ற குறிப்பேடுகளில் உள்ளது. ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பொதுவெளியில் பரப்ப வேண்டாம் என அன்புமணி இராமதாஸ் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
10.5 சதவீதம் வன்னியர் உள் இடஒதுக்கீடு: அன்புமணி ராமதாஸ் அவர்கள் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து, தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பதற்கு எந்த தடையும் கிடையாது எனவும், தரவுகளை சேகரித்து, இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
10.5 சதவீதம் வன்னியர் உள் இடஒதுக்கீடு வழங்க, கடந்த ஆட்சியில், அரசியல் காரணங்களுக்காக, தேர்தல் ஆதாயத்திற்காக, அவசர கோலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. தக்க தரவுகள் இல்லாமல் இயற்றப்பட்ட இந்தச் சட்டம் செல்லாது என அறிவித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்,
- உள்ஒதுக்கீடு வழங்க அண்மைக் காலத்தில் பெறப்பட்ட சாதிவாரி (pertinent and contemporaneous data) சேகரித்து ஆய்வு செய்யப்படவில்லை. உள்ஒதுக்கீடு வழங்க காலங்கடந்த புள்ளி விவரங்களை மட்டுமே அடிப்படையாக கொள்ளப்பட்டுள்ளது.
- காலங்கடந்த புள்ளி (antiquated data) அடிப்படையில் வன்னியர்களுக்கு மட்டும் உள்ஒதுக்கீடு வழங்கப் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் சமுதாயங்களின் பிற்படுத்தப்பட்ட தன்மை மற்றும் சமூக நிலை போன்ற விவரங்கள் ஏதும் ஆராயப்படவில்லை.
- வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கிட மக்கள் தொகை ஒன்று மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்பது சட்டப்படியாக நீதிமன்றத்தால் அனுமதிக்கக் கூடியதல்ல.
மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பட்டியல்களில் உள்ள 115 சமுதாயங்களை ஒருபுறமும், ஒரேயொரு வன்னியர் சமுதாயத்தை மறுபுறமும் வேறுபடுத்திக் காட்டி வகைப்படுத்துவதற்கு சரியான காரணங்கள் ஏதும் 2021 சட்டத்தில் கூறப்படாத நிலையில், இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் 14, 15 மற்றும் 16 ஆகியவற்றிற்கு எதிராக உள்ளது. உள்ஒதுக்கீடு வழங்க ஏற்கத்தக்க காரணங்கள் ஏதுமில்லை.