சேலம்:சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் வடகிழக்கு பருவமழையொட்டி, சேலம் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசுகையில்," சேலம் மாநகராட்சியின் முக்கிய நீர்நிலைகளாகக் கருதப்படும் மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி, போடிநாயக்கன்பட்டி ஏரி, பள்ளப்பட்டி ஏரி, சேலத்தாம்பட்டி ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டத்தினை தொடர்புடைய துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் அனைத்தும் அலுவலர்களால் தொடர் கண்காணிப்பில் இருப்பதை உறுதி செய்தி வேண்டுமெனவும், மேலும், தேவைப்படும் நேரங்களில் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருப்பதையும், நீர் நிலைகளில் ஆழமான பகுதிகளின் அருகில் எச்சரிக்கை பலகைகளை வைத்திருப்பதையும் அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் மின் இணைப்புகள் மற்றும் மின் சாதனங்களின் பயன்பாடுகள், சுகாதாரமான குடிநீர் வழங்கிடுவதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமெனவும், மழைக்காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டதை உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறையினர் குடிநீர் ஆதாரங்களில் முறையாக குளோரின் சேர்க்கப்பட வேண்டும். மேற்படி பணிகளை கண்காணிக்க குளோரினேசன் குழுக்கள் அமைத்திடவும், அதேபோன்று, வடகிழக்கு பருவமழையையொட்டி மழைக்கால நோய்களுக்கான சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள் தேவைப்படும் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து நடத்தப்படுவதை பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க:சேலம்: கொட்டித் தீர்த்த மழையால் ஆயிரம் வீடுகளுக்குள் வெள்ளம்.. போக்குவரத்து தடையால் பொதுமக்கள் திணறல்!