சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த ஐந்தாம் நாள் கூட்டத்தொடரில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் 16 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவைகள் பின்வருமாறு:-
1). திரவ பெட்ரோலிய வாயு( LPG ) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் 73 லட்சம் ரூபாய் செலவில் வழங்குதல்.
2). 693 விடுதிகளுக்கு DTH இணைப்புகளுடன் LED தொலைக்காட்சி பெட்டிகள் 2 கோடியே 93 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்குதல்.
3). சீர்மரபினர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் உதவி திட்டங்களை இணைய வழி சேவைகள் மூலம் ஒருங்கிணைத்து செயலாக்கம் (Online Operations).
4). சென்னை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய பெருநகரங்களில் உள்ள விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த பொது சமையலறை (Common Kitchen) 2 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்துதல்.
5). விடுதிகளில் விடுதிகள் மேலாண்மை தகவல் அமைப்பு HMIS ( Hostel Management Information System)10 கோடியே 59 லட்சம் 43 ஆயிரம் ரூபாய் செலவில் செயல்படுத்துதல்.
6). 290 கல்லூரி விடுதிகளின் சமையலறை பயன்பாட்டிற்காக புதிய பாத்திரங்கள் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் வழங்குதல்.
7). 692 பள்ளி விடுதிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் 1 கோடியே 38 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்குதல்.
8). ஈரோடு, தூத்துக்குடி, கடலூர், கோயம்புத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தலா ஒரு விடுதியென ஐந்து புதிய கல்லூரி மாணவியர் விடுதிகள் 2 கோடியே 83 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் துவங்குதல்.