தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Paytm போல Pay'PM'.. அமைச்சர் பிடிஆர் கடும் விமர்சனம்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

PTR Palanivel Thiagarajan Campaign:”யாரெல்லாம் ஐடி, ஈடி, சிபிஐ வழக்கு விசாரணையில் மாட்டிக் கொண்டார்களோ, அவர்கள் எல்லாம் பேடிஎம் (Paytm) என்பது போல பே பிஎம் (Pay'PM') என்கிற திட்டத்தில் தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துகிறார்கள்” என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Minister PTR Palanivel Thiagarajan Campaign
Minister PTR Palanivel Thiagarajan Campaign

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 8:19 PM IST

மதுரை: இந்தியா கூட்டணியின் சார்பில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து, மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட தளவாய், அக்ரஹாரம், தாளமுத்து பிள்ளை சந்து, செல்லத்தம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, "அதிமுக ஒரு விளம்பரத்தை வெளியிட்டு பொய் பிரச்சாரத்தைச் செய்து வருகிறது. அதில் தாலிக்குத் தங்கம் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி விட்டார்கள் என்று பச்சைப் பொய் சொல்கிறார்கள். சட்டமன்றத்திலேயே இது குறித்த உண்மையை நான் சொல்லி இருக்கிறேன்.

கடந்த அதிமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளாக தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது, அதை அவர்கள் வெளிப்படையாகவும் சொல்லவில்லை. அவர்கள் தாலியும் வாங்கவில்லை, தங்கமும் வாங்கவில்லை. நிதியும் அதற்காக ஒதுக்கவும் இல்லை.

ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தத் திட்டத்தைத் துவக்குவது என்பது முடியாத காரியம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்தவர்களில் இருந்து தற்போது வரை அனைவருக்கும் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவது என்பது கடினமான காரியம்.

எனவே, அதிமுக நிறுத்தி வைத்த திட்டத்தினை மீண்டும் எங்களால் துவக்க முடியாது என்ற காரணத்தினால், பெண் கல்விக்காக, அவர்கள் ஊக்கத்திற்காக, ஊக்கத்தொகையாக மாதம் 1,000 ரூபாய் என்ற திட்டத்தைச் செயல்படுத்தினோம். பெண்கள் கல்வி பெறுவதற்காகவே, இத்தகைய மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தினோம்.

தாலிக்குத் தங்கம் என்ற திட்டத்தை விட சிறப்பான திட்டமாக புதுமைப்பெண் கல்வித் தொகை திட்டம் துவக்கப்பட்டது. இது சாதாரண தேர்தல் அல்ல, மிக முக்கியமாக நடக்க இருக்கின்ற தேர்தல். இந்தியாவில் ஜனநாயகத்தைப் படுகொலை செய்து, பணநாயகத்தின் மூலம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற பாஜக அரசு மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

பங்களாதேஷை விட பொருளாதாரம் மிகவும் சரிவாகக் கொண்டு சென்றுள்ளனர். மோசமான ஒரு பொருளாதாரத்தைக் கையாண்டுள்ளது பாஜக அரசு. அரைகுறையாகத் திட்டமிடல் இல்லாத ஜிஎஸ்டி வரி விதிப்பு, மேலும் ஊழலுக்கும், பாஜகவுக்கும் நெருங்கிய உறவு இருக்கிற இந்த உலகத்திலேயே ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு கட்சிக்குத் தகுதி இல்லை என்றால், அது பாஜக தான்.

இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களால் ஊழல்வாதிகள் என்று வழக்குப் போடப்பட்ட 25 நபர்கள் பாஜகவின் வாஷிங் மெஷின் என்ற திட்டத்தால் அனைவரும் சுத்தமாகி விட்டார்கள். தேர்தல் பத்திரம் மூலம் இலாபமே இல்லாத பல நிறுவனங்கள் பல நூறு கோடிகளைத் தானமாக பாஜகவுக்குக் கொடுத்துள்ளார்கள்.

மேலும், யாரெல்லாம் ஐடி, ஈடி, சிபிஐ வழக்கு விசாரணையில் மாட்டிக் கொண்டார்களோ, அவர்கள் எல்லாம் பேடிஎம் (Paytm) என்பது போல பே பிஎம் (Pay 'PM') என்கிற திட்டத்தில் தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துகிறார்கள். அவர்கள் மேல் இருந்த வழக்குகள் எல்லாம் ரத்து செய்யப்படும்.

இந்த பாஜக அரசு இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்கிற ஒரு நாடும், இந்திய சட்டமைப்பும் என்கிற மக்களாட்சி முறையும் நீடிக்காது. இவர்களது ஆட்சி நீடித்தால் எதிர்காலமே இருண்டு போய்விடும். நாட்டைக் காப்பாற்ற, மக்களாட்சியைக் காப்பாற்ற, இந்தியாவின் இதயத்தைக் காப்பாற்ற இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு முழுவதும் டெட் தேர்ச்சி பெற்றவர்கள் திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details