தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவின் வாஷிங் மெஷின் திட்டத்தால் 25 ஊழல்வாதிகள் சுத்தமாகி விட்டனர் - அமைச்சர் பிடிஆர் விமர்சனம்! - lok sabha election 2024

BJP Washing Machine Project: பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல்வாதிகள் என்று வழக்குப் போடப்பட்ட 25 நபர்கள் பாஜகவின் வாஷிங் மெஷின் என்ற திட்டத்தால் அனைவரும் சுத்தமாகி விட்டார்கள் என திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

பாஜகவின் வாஷிங் மெஷின் திட்டத்தால் 25 ஊழல்வாதிகள் சுத்தமாகி விட்டனர்
BJP Washing Machine Project

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 10:58 PM IST

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட ஏ ஏ சாலை மேலப்பொன்னகரம், கரிமேடு, பொன்னகரம், பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதில் பேசியதாவது, “8 ஆண்டுகளாக என்ன செய்தேன், என்ன திட்டம் கொடுத்துள்ளேன் என அறிக்கையாக 6 மாதத்திற்கு ஒருமுறை தொகுதி மக்களுக்குக் கொடுத்துள்ளேன். எதிர்க்கட்சியோ, அமைச்சரோ எப்படி இருந்தாலும் எல்லா நேரமும் கூற வேண்டிய மாறா தத்துவம் மனிதநேயமும், செயல்திறனும் தான். மக்களுக்கான திட்டங்கள் முழுமையாகச் சென்றடைய வேண்டும் என உழைக்கிறோம். தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இந்தியாவிலேயே முதல்முறையாக இ சேவை மையங்களை அதிகமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரிமேடு மீன் மார்க்கெட் இடிக்கப்பட்டுத் தொடர்ந்து கரிமேட்டில் உலகத்தரம் வாய்ந்த குழந்தைகள் பயிற்சி மையம் அமைக்க உள்ளோம். அதிமுகவை ஒப்பிடும் போது திமுக கூட்டணியில் மனிதநேயமும், செயல்திறனும் உள்ளது. அதனால் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

இந்த தேர்தலில் மூன்றாவது தீய சக்தியாக ஒரு கூட்டணி அமைந்துள்ளது. மதவாத கூட்டணியாக, மதவெறியைத் தூண்டும் கட்சியாக, மத அடிப்படையில் செயல்படும் ஒரு கட்சியாக பாஜக உள்ளது. இவர்கள் நல்லவர்களா, மனித நல்லிணக்கத்திற்கு உதவுவார்களா, சுயநலத்திற்காக மனிதக் குலத்தை உடைப்பவர்களா என்ற கேள்வி பாஜகவை நோக்கி எழுந்துள்ளது.

தீமை செய்யும் ஒரு நிர்வாகம் மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளது. கொடூரமான ஆட்சி செய்பவர்கள் பாஜக, பணம் மற்றும் சுயநலத்திற்காகத் தேர்தல் பத்திர திட்டத்தைக் கொண்டு வந்து முறைகேடு செய்துள்ளனர். ஜிஎஸ்டியை திட்டமிடாமல் நிறைவேற்றி அமல்படுத்தி உள்ளனர். ஜிஎஸ்டி திட்டம் ஒரு குறைபாடு உள்ள திட்டம், இதனால் சிறு குறு தொழில் மற்றும் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்குப் பணமும் கொடுக்க மாட்டார்கள், கடனும் வாங்க விட மாட்டார்கள். அவர்களாக ஒரு கணக்குப் போட்டு 29 பைசா கொடுப்பார்களாம். அவர்களுக்கு அடிமையானால் எது வேண்டுமானாலும் செய்து கொடுப்பார்கள். மத்திய முகமைகளைப் பயன்படுத்தி வழக்குப்பதிவு செய்து எதிர்க்கட்சித் தலைவர்களை தங்கள் கட்சியில் பாஜக இணைக்கிறார்கள்.

மோடியின் வாஷிங் மெஷினில் கறையாத குற்றங்களைச் செய்தவர்கள் கூட முழுவதுமாக வாஷ் செய்யப்பட்டுக் கறைபடியாத நபர்களாக மாற்றிக் காட்டுகிறார்கள். நேர்மையைப் பற்றி ஊழலைப் பற்றி பேச தகுதியல்லாத நபர்கள் பாஜகவினர். ஜனநாயகத்தை, பணநாயகத்தை வைத்து படுகொலை செய்யும் அரசாக பாஜக உள்ளது.

இது சாதாரண தேர்தல் இல்லை, அஇஅதிமுக ஒரு விளம்பரத்தை வெளியிட்டுப் பொய் பிரச்சாரத்தைச் செய்து வருகிறது. அதில் தாலிக்குத் தங்கம் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்திவிட்டார்கள் என்று பச்சைப் பொய் சொல்கிறார்கள்.

சட்டமன்றத்திலேயே இது குறித்து, நான் இந்த உண்மையைச் சொல்லி இருக்கிறேன். கடந்த அதிமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளாகத் தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது, அதை அவர்கள் வெளிப்படையாகவும் சொல்லவில்லை. அவர்கள் தாலியும் வாங்கவில்லை, தங்கமும் வாங்கவில்லை, நிதியும் அதற்காக ஒதுக்கவும் இல்லை.

ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் திட்டத்தைத் துவக்குவது என்பது முடியாத காரியம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்தவர்களில் இருந்து தற்போது வரை அனைவருக்கும் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவது என்பது கடினமான காரியம்.

எனவே அதிமுக நிறுத்தி வைத்த திட்டத்தினை மீண்டும் எங்களால் துவக்க முடியாது என்ற காரணத்தினால், பெண் கல்விக்காக, அவர்கள் ஊக்கத்திற்காக, ஊக்கத்தொகையாக மாதம் 1000 ரூபாய் என்கிற புதுமைப்பெண் திட்டம் என்ற திட்டத்தைச் செயல்படுத்தினோம். பெண்கள் கல்வி பெறுவதற்காகவே இத்தகைய மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தினோம். தாலிக்குத் தங்கம் என்கிற திட்டத்தை விட சிறப்பான திட்டமாகப் புதுமைப்பெண் கல்வித் தொகை திட்டம் துவக்கப்பட்டது.

இந்தியாவில் ஜனநாயகத்தைப் படுகொலை செய்து பணநாயகத்தின் மூலம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற பாஜக அரசு மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. பங்களாதேஷை விட இந்தியாவைப் பொருளாதாரத்தில் மிகவும் சரிவான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மோசமான ஒரு பொருளாதாரத்தைக் கையாண்டுள்ளது பாஜக அரசு. அரைகுறையாகத் திட்டமிடல் இல்லாத ஜிஎஸ்டி வரி விதிப்பு, இந்த உலகத்திலேயே ஊழலைப் பற்றி பேசுவதற்கு ஒரு கட்சிக்குத் தகுதி இல்லை என்றால், அது பாஜக தான்.

இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல்வாதிகள் என்று வழக்குப் போடப்பட்ட 25 நபர்கள் பாஜகவின் வாஷிங் மெஷின் என்ற திட்டத்தால் அனைவரும் சுத்தமாகி விட்டார்கள். தேர்தல் பத்திரம் மூலம் இலாபமே இல்லாத பல நிறுவனங்கள் பல நூறு கோடிகளைத் தானமாக பாஜகவுக்குக் கொடுத்துள்ளார்கள்.

மேலும், யாரெல்லாம் ஐ.டி, இ.டி, சி.பி.ஐ மூலம் வழக்கு விசாரணையில் மாட்டிக் கொண்டார்களோ, அவர்கள் எல்லாம் பேடிஎம் (paytm) என்பது போல பேபிஎம் (paypm) என்கிற திட்டத்தில் தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துகிறார்கள். அவர்கள் மேல் இருந்த வழக்குகள் எல்லாம் ரத்து செய்யப்படும். இந்த பாஜக அரசு இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்கிற ஒரு நாடும், இந்திய சட்டமைப்பும் என்கிற மக்களாட்சி முறையும் நீடிக்காது என்றார்.

இதையும் படிங்க:அருப்புக்கோட்டையில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து.. நீலகிரியில் 3 சொகுசு கார்களும் தீயில் எரிந்து சேதம்! - Car Fire Accident

ABOUT THE AUTHOR

...view details