விழுப்புரம்:விழுப்புரம் (தனி) தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக அமைச்சர் பொன்முடி கிராம பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். காணை ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தனூர், பொன்னாங்குப்பம், ஆசூர், ஆசூர் காலனி, மேலக்கொந்தை, வி.சாலை உள்ளிட்ட கிராம பகுதிகளில் அமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொன்னாங்குப்பம் பகுதியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “இந்தியாவில் எந்த அரசும் செய்யாத பல முன்னோடி திட்டங்களை திராவிட அரசு செய்துள்ளது. விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் போன்றவை மகளிரின் பொருளாதார சுமையை போக்கி தன்னம்பிக்கையோடும், தன்னிறைவோடும் நீங்கள் யாரையும் சாராமல் வாழ்வதற்கான திட்டம்.
அது மட்டுமின்றி காலை சிற்றுண்டி திட்டம், தாய்மார்களின் சுமையை போக்கி பிள்ளைகளின் பசியை நீக்கியுள்ளது. எனவே திமுக அரசு என்றாலே மகளிருக்கான அரசுதான்” என்றார். அப்போது, அங்கிருந்த சிறுமியை அழைத்து பள்ளியில் காலை சிற்றுண்டி கிடைக்கிறதா, எப்படி இருக்கிறது என விசாரித்தார். அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், நாங்கள் படித்த காலங்களில் இது போன்ற திட்டங்கள் எல்லாம் கிடையாது.
அந்த காலகட்டத்தில் என்னுடன் படித்த 16 பேரில் ஒருவர் மட்டுமே பெண். பெண்களுக்கு கல்வி என்பது காலங்காலமாக மறுக்கப்பட்டது. அதனை உடைத்தெறிந்து கல்வி எனும் கரையாத செல்வத்தை பெண்கள் பெற வேண்டும் என போராடியவர் பெரியார். பெரியாரின் பாதையில் அவர் கண்ட கனவை செயல்படுத்தியவர்கள் அண்ணா, கலைஞர். அவர்களின் வழி வந்த முதலமைச்சர் ஸ்டாலினும் பெண்கள் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.