விழுப்புரம்:விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் புதிதாக பொறுப்பேற்ற தெற்கு மாவட்டச் செயலாளர் பொன்.கௌதம சிகாமணி தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் பொன்முடி பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu) இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "24 ஆண்டுகளுக்கு முன்பே தளபதி மன்றத்தில் தன்னை இணைத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை விழுப்புரம் வரவழைத்து, மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்திக் காட்டியவர் நம்முடைய பொன்.கௌதம சிகாமணி.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்த உடனே, முதலாவதாக திமுகவின் வேட்பாளரை களம் இறக்கியவர் நம்முடைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மற்றவர்கள் இன்று வரை யோசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இரண்டு கட்சிகளுக்குமே தெரியும், தேர்தலில் நின்றாலும் வெற்றி பெற மாட்டோம் என்று. நம்முடைய வேட்பாளர் அன்னியூர் சிவா பல ஆண்டுகளாக திமுகவிற்காக உழைத்தவர். எந்த ஒரு பதவியும் வேண்டாம் என கட்சிப் பணியாற்றியவருக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்றாகும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மாற்றுக் கட்சியில் இருந்து வந்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.லட்சுமணன் திமுகவிற்கு வந்த நாள் முதல் இன்று வரை உண்மையான விசுவாசத்தோடு விழுப்புரம் தொகுதி மக்களுக்கும், திமுகவிற்கும் கொள்கைப் பிடிப்புடன் பாடுபட்டு வருகிறார்.
அவரது பணி போற்றப்பட வேண்டும். நம்முடைய மாவட்டச் செயலாளர் பொன் கௌதம சிகாமணி பொறுப்பேற்று நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், இந்த தேர்தலில் நாம் அனைவரும் கடினமாக உழைத்து அவருக்கு வெற்றியப் பெற்றுத் தர வேண்டும்.
அவருக்கு மட்டுமல்ல, நம்முடைய இளைஞர் துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வருக்கு வெற்றிக்கனிகளைப் பரிசாக நாம் வழங்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த தொகுதியில் போட்டியிடும் போதே அதிகமான வாக்குகளைக் கொடுத்த தொகுதி விக்கிரவாண்டி. இந்த இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகளுக்கும் மிகாமல் நாம் வெற்றி பெற வேண்டும், அதற்கு திமுக செயல் வீரர்கள் அனைவரும் கடுமையாக உழைத்திட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; 242வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்!