சென்னை:தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் முதலாவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்த கருத்துரையாடல் நிகழ்வில் சர்வதேச பங்குதாரர்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள், தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் கல்வியியல் ஆராய்ச்சியாளர்கள், மாணவத் தொழில் முனைவோருக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளை வளர்ப்பதற்கு 50 உயர்கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, வேலைவாய்ப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "முதலமைச்சர் தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்றவுடன் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், புது முயற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, உலகத்திலே முதல் இடத்தில் திறன் வளர்க்கும் மையமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
இந்த நிகழ்வில் திறன் மேம்பாட்டிற்காக 50 உயர்கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொலை நோக்குப் பார்வையுடன் இளைஞர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்து ஊக்குவிக்கும் வகையில், புதிய முயற்சிகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial intelligence) கொள்கை மூலம், தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் அதிக வேலைவாய்ப்புகள் மற்றும் புதிய தகவல் தொழில்நுட்ப சார்ந்த நிறுவனங்கள் ஈர்க்கப்படும்.
விரைவில் முதலமைச்சரின் அமெரிக்கப் பயணத்தில், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்படும். ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தில் முதல் இடத்தில் இருந்தோம். ஆனால், தற்போது ஐதராபாத், பெங்களூரு அளவிற்குக் கூட தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் வளரவில்லை. ஏனெனில், நாம் ஆண்டுக்கு ரூ.120 கோடி மட்டுமே ஒதுக்குகிறோம். ஆனால், அவர்கள் ரூ.1000 கோடி வரை ஒதுக்குகிறார்கள். இதனால் தான் ஐதராபாத், பெங்களூரு தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் பலதுறைகள் முன்னேற்றம் அடைய வேண்டும் எனப் பார்த்து கொண்டிருப்பதால், தகவல் தொழில்நுட்பத்தை நாம் பெரிதாகப் பார்க்கவில்லை. அதைத் திருத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை படிப்படியாகக் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். மேலும், தகவல் தொழில்நுட்பத்தில் கடந்த ஆண்டு வரை காணாத வளர்ச்சியை பார்த்துள்ளோம். அதனை இன்னும் சிறப்பாக செயல்படுத்த முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மகாதேவன் - கொலீஜியம் பரிந்துரை!