தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"டங்ஸ்டன் சுரங்க திட்டம் ஒரு போதும் வரப்போவதில்லை" - அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்! - MINISTER P MOORTHY

மேலூர் பகுதியில் ஒரு போதும் டங்ஸ்டன் திட்டம் வராது என அமைச்சர் பி.மூர்த்தி உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் மூர்த்தி, மேலூர் பகுதி மக்கள்
அமைச்சர் மூர்த்தி, மேலூர் பகுதி மக்கள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2025, 2:41 PM IST

மதுரை:'அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளபட்டி உட்பட்டு இருக்கக்கூடிய மேலூர் பகுதியில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வராது, வரக்கூடாது என சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி ஆதரவோடு தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும், ஆகையால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை' எனவும் அமைச்சர் மூர்த்தி அரிட்டபட்டியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளபட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து, இப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு அடுத்து மாபெரும் போராட்டம்:

இந்நிலையில் ஜனவரி 7-ஆம் தேதி காவல் துறையின் தடையை மீறி நரசிங்கம்பட்டி பெருமாள்மலையிலிருந்து மதுரை வரை சுமார் 16 கி.மீ தூரம் பேரணியாகச் சென்று மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக அடையாளப் போராட்டம் ஒன்றை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடத்தினர். ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தை அடுத்து நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் போராட்டமாக இது அமைந்தது.

அப்போராட்டத்தின் முடிவில், மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை முழுவதுமாகக் கைவிட வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மதுரையை தமிழ்ப்பண்பாட்டு மண்டலமாகவும், பெரியாறு பாசனப் பகுதி முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமியற்றி அரசிதழில் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ஒருபோதும் வராது:

இந்நிலையில், தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, அரிட்டாபட்டி, வல்லாளபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று அம்மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது பொதுமக்களிடம் பேசிய அமைச்சர், "தமிழக அரசு டங்ஸ்டன் வருவதை ஒருபோதும் ஏற்கவில்லை. இதற்காக சட்டமன்றத்தைக் கூட்டி, சிறப்புத் தீர்மானம் இயற்றி மத்திய அரசு அனுப்பப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை" என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "மேலூர் பகுதியில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வராது! வரக்கூடாது என சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் நேரடியாக மக்களைச் சந்தித்து விளக்கம் அளித்து வருகிறோம்.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை போல் சீறி எழும் மதுரை டங்ஸ்டன் போராட்டம்!

இங்கிருந்து ஒரு பிடி மண்ணைக் கூட அள்ள முடியாது என்று நேற்று சட்டமன்றத்தில் நிதியமைச்சரும் குறிப்பிட்டுள்ளார். மக்களைச் சந்தித்து அச்சத்தைப் போக்க முதல்வர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நானும், மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் உங்களிடம் பேச வந்துள்ளோம். தற்போது தமிழ்நாட்டு முதலமைச்சரும், அரசும் எடுத்துள்ள இந்த முடிவே இறுதியானது.

டங்ஸ்டன் திட்டம் வராமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும். சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானமே சட்டம் தான். இது ஜனநாயக நாடு. ஆகையால் யார் வேண்டுமானாலும் வரலாம், பேசலாம். மேலூர் பகுதி மக்களைக் காப்பாற்றுவது தமிழ்நாடு அரசின் கடமை என்பதை முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அதனை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்திருக்கின்றன. யார் எதைப் பற்றிச் சொன்னாலும் தமிழ்நாடு அரசு இந்த மக்களுக்கு நிச்சயமாக பாதுகாப்பாக இருக்கும்" என திட்டவட்டமாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி அ.வல்லாளபட்டி, கிடாரிப்பட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து, தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details