தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்திரப் பதிவுத்துறையில் பிப்ரவரியில் மட்டும் ரூ.1,812.70 கோடி வருவாய் - அமைச்சர் பி.மூர்த்தி தகவல்!

Deeds Registration Department: 2023-2024ஆம் நிதியாண்டில் வணிக வரித்துறையில் பிப்ரவரி மாதம் வரை ரூ.1,16,824 கோடி மொத்த வரி வருவாய் ஈட்டியுள்ளது எனவும், பத்திரப் பதிவுத்துறையில் இந்த நிதியாண்டில் பிப்ரவரி மாதத்தில் ரூ.1,812.70 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Deeds Registration Department
பத்திரப் பதிவுத் துறை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 10:44 PM IST

சென்னை:சென்னையில் உள்ளநந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

வணிக வரித்துறை வருவாய்: மாநிலத்தின் வரி வருவாயில், மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் பங்களிக்கும் முக்கிய துறையாக விளங்கும் வணிக வரித்துறை, 2023-2024ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை ரூ.1,16,824 கோடி மொத்த வரி வருவாய் ஈட்டியுள்ளது.

2023-2024 ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் மட்டும் வணிக வரித்துறையில் வரி வருவாய் பத்தாயிரம் கோடியைத் தாண்டி ரூ.11,383 கோடி மொத்த வரி வருவாய் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தின்போது தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில் திருவாரூரைச் சேர்ந்த சாந்திதேவி மற்றும் குளித்தலையைச் சேர்ந்த சிவக்குமார் ஆகியோருக்கு குடும்ப நல நிதி உதவியாக தலா ரூ.3 லட்சம் காசோலையை அமைச்சர் வழங்கினார்.

அனைத்து கோட்டங்களில் பணிபுரியும் இணை ஆணையர்களும் கூடுதல் கவனம் செலுத்தி, தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரைந்து மேற்கொண்டு, அரசின் வருவாய் இலக்கை அடைவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச் செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, வணிக வரித்துறை ஆணையர் முனைவர் டி.ஜகந்நாதன், இணை ஆணையர் பொ.இரத்தினசாமி மற்றும் வணிக வரித்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், பதிவுத்துறையில் ஆவணம் தாக்கல் செய்பவரின் பெயர் மற்றும் டோக்கன் எண் ஆகியவற்றை மேம்படுத்தப்பட்ட காட்சிக்கருவி (Token Number Display Unit) அறிவிக்கும் வசதியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பதிவுத்துறையில் ஆவணம் தாக்கல் செய்பவரின் பெயர் மற்றும் டோக்கன் எண் ஆகியவற்றை (Token Number Display Unit) காண்பித்து அறிவிக்கும் வசதி ரூ.3.64 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை இன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தியாகராய நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.

முன்னதாக, கடந்த 2021-2022ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவிற்காக கூட்டமாக வரும் பொதுமக்களின் வருகையை முறைப்படுத்தும் நோக்கில், "அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பொருத்தப்பட்டுள்ள அடையாள வில்லை காட்சிக் கருவியில் தற்போது டோக்கன் எண் மட்டுமே காட்சிப்படுத்தப்படுவதால், ஆவணதாரர்கள் தங்கள் வரிசைக்கிரம முன்னுரிமையை அறிந்து கொள்வதில் குழப்பம் நிலவுகிறது என்பதால், இதனைத் தவிர்க்கும் வகையில், ஆவணதாரர்களின் பெயரும் காட்சிப்படுத்தப்படும் வகையிலான மேம்படுத்தப்பட்ட காட்சிக்கருவிகள் (Token Number Display Unit) அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பொருத்தப்படும்" என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, ஆவணப்பதிவில் வரிசைக்கிரமத்தை விடுதலின்றியும் வெளிப்படையாகவும் உறுதி செய்வதற்காக டோக்கன் எண்ணோடு ஒவ்வொரு பதிவுடனும் தொடர்புடைய நபரை பெயர் சொல்லி அழைக்கும் வகையில் இந்த வசதியானது ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவு ரூ.3,63,95,508 ஆகும்.

இந்த மேம்படுத்தப்பட்ட காட்சிக்கருவிகள் ஆவணம் தாக்கல் செய்பவர் பெயர், டோக்கன் எண் ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டு அறிவிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆவணம் செய்ய இருப்பவரின் பெயரும் டோக்கன் எண்ணும் ஒரே சமயத்தில் அறிவிக்கப்படும் போது திரையில் அடுத்த இரண்டு வில்லைகளின் விவரங்களும் காட்சிப்படுத்தப்படும்.

பதிவுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் டோக்கன் எண் எப்போது வரும் என்பதை பதைபதைப்புடன் எதிர்நோக்கி காத்திராமல், இந்த புதிய வசதியின் மூலம் தங்கள் பெயரும், டோக்கன் எண்ணும் காட்சிக்கருவியில் காண்பிக்கப்பட்டு பெயர் சொல்லி அழைக்கப்பட்டவுடன் அலுவலகத்திற்குள் பதட்டமின்றி சென்று, எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

பத்திரப்பதிவுத் துறை: மேலும், இது போன்ற புதிய முன்னெடுப்புகளின் விளைவாக, பதிவுத்துறையில் இந்த நிதியாண்டில் பிப்ரவரி முடிய ரூ.16,653.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற நிதியாண்டில் பிப்ரவரி 2023 வரை அடைந்த வருவாயை விட ரூ.1121.60 கோடி ரூபாய் அதிகமாகும்.

இந்த வருடம் பிப்ரவரி 2024ஆம் ஆண்டு மாதத்தில் ரூ.1812.70 கோடி வருவாயை பதிவுத்துறை ஈட்டியுள்ளது. சென்ற நிதியாண்டில் பிப்ரவரி 2023ஆம் ஆண்டு அடைந்த வருவாயை விட் ரூ.218.74 கோடி அதிகமாகும். இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக 3 கம்பெனி துணை ராணுவத்தினர் கோவை வருகை!

ABOUT THE AUTHOR

...view details