ஈரோடு:கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி சத்தியமங்கலத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, “நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். தற்போது 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 30 சதவீத பணிகளை விரைவாக முடித்து விடுவோம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின் படியும், விவசாயிகள் பாதிக்காத வகையிலும் விரைவாக பணிகளை முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கீழ்பவானி வாய்க்காலில் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். ஆன்லைன் மூலம் வீடு கட்டுவதற்கு கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.