கோயம்புத்தூர்:கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
அமைச்சர் முத்துசாமி செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி கூறுகையில்,"கோவையில் 1542 ரேஷன் கடைகள் உள்ளது. இதன் மூலம் 11 லட்சத்து 42 ஆயிரம் குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 34 லட்சம் மக்கள் பயன் பெறுகிறார்கள். மொத்தமாக 6000 பேருக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக 750 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை பெற மனு அளித்த சிலருக்கு கிடைக்கப் பெறாத சூழல் இருக்கிறது. காரணம் அந்த மனுவில் ஏதேனும் குறைபாடோ அல்லது ஒரே குடும்பத்தில் இரண்டு அட்டைகள் போன்று இருப்பதால் தற்போதைக்கு அவர்களது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் மீண்டும் மனு அளித்தால் அது குறித்து ஆய்வு மேற்கொண்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மகளிர் உரிமைத்தொகை:தொடர்ந்து பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகையைப் பொருத்தவரை ஏறத்தாழ 1 கோடியே 17 லட்சம் பேருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் புதிய 1 லட்சத்து 40 ஆயிரம் பயனர்கள் இணைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக யாரேனும் மனு அளிக்க விரும்பினால், மனு அளிக்கலாம் என்று அரசு சார்பிலேயே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவ்வாறு அளிக்கும் மனுவில் எந்த ஒரு குறைபாடும் தவறும் இல்லாமல் இருந்தால், கண்டிப்பாக உரிமைத்தொகை கிடைக்கும் எனவும் அவர்களும் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு?ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சில தட்டுப்பாடுகள் இருந்ததைக் குறிப்பிட்ட அவர் தற்போது அவை ஏறத்தாழ 90 சதவிகிதம் சரி செய்யப்பட்டு இருப்பதாகவும் மீதமுள்ளவற்றையும் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சித் தலைவர் அதனைக் கண்காணித்து வருவதாகவும் இதில் ஏற்படுகின்ற குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கூறுகையில்,"ரேஷன் கடைகளில் கைரேகை பதிவாகாத பட்சத்தில் கண் கருவிழி மூலம் பதிவு செய்யப்பட்டு ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
சாரதா மில் சாலை, பாலக்காடு சாலை பழுதடைந்து இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் பாதாள சாக்கடை பணிகள் முடிந்தாலும் ஒரு சில பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். மேலும் வருகின்ற 15 நாட்களுக்குள் கோவை மாநகரில் பணிகள் முடிந்த முக்கிய சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:"ஊரை விட்டு ஒதுக்கி வெச்சுட்டாங்க" - ஆதார், ரேஷன் கார்டை திருப்பி ஒப்படைக்க முயன்ற குடும்பம்.. தருமபுரியில் நடந்தது என்ன?