ஈரோடு: ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 20ஆம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கோடேபாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி கர்ப்பிணி துர்காவுக்கு(26) ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து 24ஆம் தேதி அதே மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டத்தில் துர்கா மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் அதிக காய்ச்சல் காரணமாக மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு துர்கா சிகிச்சை பலனின்றி 25ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து தவறான குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை காரணமாகத் தனது மனைவி துர்கா உயிரிழந்ததாக அவரது கணவர் பன்னீர்செல்வம் பவானிசாகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையில் கோவை அரசு மருத்துவமனையில் துர்காவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள் தவறாக குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையால் உயிரிழந்ததாகவும், அலட்சியத்துடன் மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டு உயிரிழப்பு காரணமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் 27ம் தேதி புன்செய் புளியம்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் முன்பு சடலத்துடன் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.