மதுரை:திருமங்கலம் அருகே அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. இந்த சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து தொலைவில் உள்ளது. எனவே, இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இச்சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு ஜூலை 10 முதல் அமலுக்கு வந்ததால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி உள்ளூர் மக்கள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும், இதனை எதிர்த்து ஜூலை 31 ஆம் தேதி திருமங்கலத்தில் வணிக சங்கம் சார்பாக கடையடைப்பு போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கட்டணம் இல்லை: இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, “பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு வரி விதிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அந்த நடைமுறை அடிப்படையில் தற்போது திருமங்கலத்தில் உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு இனி கப்பலூர் சுங்கச்சாவடியில் எந்த கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
அதனைத்தொடர்ந்து, திருமங்கலம் வணிகர் சங்க தலைவர் செல்வம் கூறுகையில், “நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எங்களுக்கு திருப்தி இல்லை. தற்காலிக நிவாரணத்தை நாங்கள் விரும்பவில்லை. கப்பலூர் சுங்கச்சாவடி சட்டத்திற்கு புறம்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சுங்கச்சாவடிக்கும் மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையே அறுபது கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும். இந்த விதிமுறை கப்பலூர் சுங்கச்சாவடியில் மீறப்பட்டுள்ளது.