புதுகோட்டை:புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 7வது புத்தகத் திருவிழாவை இன்று முதல் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நடத்துகின்றனர். இந்த புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த புத்தகத் திருவிழா புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக் கல்லூரி திடலில் நடைபெறும் நிலையில், அங்கு 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் முன்னணி பதிப்பாளர்கள் தங்களுடைய படைப்புகளை கண்காட்சியில் வைத்துள்ளனர். மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, “வாசிப்பை நேசி, வாசிப்பு உன்னை உயர்த்தும் என மறைந்த தலைவர் கருணாநிதி எப்போதும் புத்தகத்தோடு புத்தகமாக இருப்பார். வாசிப்பது மட்டும் முக்கியமல்ல, வாசித்ததை சரியான நேரத்தில் சரியான இடத்தில் வெளிப்படுத்த வேண்டும் அதுதான் முக்கியம்.
இந்த கால இளைஞர் சமுதாயம் மத்தியில், புத்தக வாசிப்பு பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் நம்முடைய முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டதால்தான் இந்த புத்தகத் திருவிழாவை அரசுத் துறையுடன் இணைந்து செய்யப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு வாசிப்பு இயக்கங்கள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இது கம்ப்யூட்டர் காலமாக இருந்தாலும் புத்தகம் படிப்பது அவசியமானது என்பதை வலியுறுத்தும் விதமாகத்தான் இந்த புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.