தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3-4 மாதத்திற்குள் புயல் பாதுகாப்பு மையங்கள்.. மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் உறுதி! - MINISTER MEYYANATHAN

Minister visit flood affected areas: மயிலாடுதுறை மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு மையங்கள் மூன்றிலிருந்து நான்கு மாத காலத்திற்குள் கட்டித் தரப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 11:57 AM IST

மயிலாடுதுறை: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, வெள்ள நீர் முழுவதும் தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியதால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் சென்று கொண்டுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராமங்களான நாதல்படுகை, முதலை மேடு திட்டு, வெள்ள மணல் ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்று வெள்ள நீர் புகுந்தது.

அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனால் அங்கு பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தோட்டக்கலை பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் வெள்ள நீர் கடந்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் தங்களது உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் கரையில் அமைந்துள்ள தற்காலிக முகாம்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் தீயணைப்பு மீட்புத்துறை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர், மருத்துவக் குழுவினர், காவல் துறையினர் வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் பாதிக்கப்படும் கிராமங்களில் முகாமிட்டுள்ளனர். இதனையடுத்து, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக நீர்வளத்துறை சார்பில் 10 ஆயிரம் மணல் மூட்டைகள் மற்றும் முப்பதாயிரம் காலி சாக்குகள், 200 சவுக்கை மரங்கள், 10 ஜேசிபி எந்திரங்கள், 5 டிராக்டர்கள், இரண்டு படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளம் பாதித்த படுகை கிராமங்களைப் பார்வையிட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, சட்டமன்ற உறுப்பினர்கள் சீர்காழி எம்.பன்னீர்செல்வம், பூம்புகார் நிவேதா எம்.முருகன், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் சென்றனர்.

இதனையடுத்து, நாதல்படுகை கிராமத்திற்குச் சென்ற அமைச்சர் மெய்யநாதனை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் சிலர், ஒவ்வொரு முறை வெள்ளம் பாதிக்கும் போதும் வந்து பார்வையிடுவதுடன் சென்று விடுகிறீர்கள் என்றும், கடந்த 2022ஆம் ஆண்டு வெள்ளம் பாதித்த போது சாலை அமைப்பது, புயல் பாதுகாப்பு மையம் அமைப்பது குறித்து உறுதியளித்தது என்னவாயிற்று என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், விரைவில் சாலை அமைத்துத் தரப்படும், புயல் பாதுகாப்பு மையம் அமைப்பதற்கு அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது என அமைச்சர் சொன்னபோதிலும், பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானம் செய்ததுடன், அமைச்சர் உள்ளிட்டோரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிவ.வீ.மெய்யநாதன் கூறுகையில், “வெள்ளம் பாதிக்கப்பட்ட காவிரி ஆற்றுக்கரையோர பகுதிகளான நாதல்படுகை, முதலை மேடு திட்டு, வெள்ள மணல் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இங்குள்ள 1,400 குடும்பங்களைச் சேர்ந்த 5,400 பேர் 7 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவர்களுக்கு காலை முதல் மூன்று வேலைகளுக்கான உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த வெள்ளத்தால் விவசாயப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஆய்வு நடத்தப்பட்டு உரிய நிவாரண உதவியும் வழங்கப்படும் எனக் கூறினார்.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் துறை மூலமாக இங்குள்ள மக்களுக்கு 2 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைப்பதற்காக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்றிலிருந்து நான்கு மாத காலத்திற்குள் அப்பணிகள் நிறைவடையும் என உறுதியளித்தார். மேலும், பிரதம மந்திரி கிராமச்சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் 6 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலை அமைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:நாமக்கல் பகுதிகளில் வெள்ள பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு மாற்று இடம் வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details