சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் நலத்திட்டங்களை செயல்படுத்தாமலும், நடைபெறும் முறைகேடுகளை தடுக்காமலும் திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது என்றும் திமுக அரசில் ஆதிதிராவிடர் நலத் துறை செயல்படுகிறதா என்று சந்தேகம் எழும் அளவுக்கு, எந்தப் பணியுமே நடைபெறவில்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ''கடந்த ஆட்சி காலத்தில் தாட்கோ மூலம் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் பல்வேறு இதர நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடங்கி இருந்தது.
தாட்கோ திட்டங்கள்:மேலும், தாட்கோ மூலம் தொழில் முனைவோரை ஊக்குவிக்க, மானியத்துடன் கூடிய கடன் வழங்க பெறபட்ட 3,963 விண்ணப்பங்கள் இருப்பில் வைக்கப்பட்டு, இம்மானியத்திற்கான தொகை ரூபாய் 52.01 கோடி விடுவிக்கப்படாமல் வங்கிகளில் நிலுவையில் இருந்தது. இந்நிலையை உடனடியாக சரிசெய்வதற்கு, மாவட்ட அளவில் மேலாளர்கள், உதவி மேலாளர்கள், திட்ட மேலாளர் போன்ற பணியிடங்கள் நிரப்புவது மிகவும் அவசியமாகும்.
தாட்கோவில் பெரும்பாலான மேலாளர் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. நிர்வாக நலன் கருதி தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மற்றும் கடனுதவி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலனை செய்து வங்கிகளில் உள்ள நிதியினை பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக 11 மாவட்ட மேலாளர்கள், 6 உதவி மேலாளர்கள் போன்ற பணியிடங்கள் ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:10,11,12ஆம் வகுப்பு மாணவர்களே தயாரா..? பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..!
காலி பணியிடங்கள்: இப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பியதின் மூலம் கடந்த ஆட்சி காலத்தில் வங்கியில் இருந்து விடுக்கப்படாத மானியத்தொகையுடன் இன்றைய தேதிவரை உள்ள ரூபாய் 100 கோடிக்கான மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வருடத்திற்கான கடனுதவி விண்ணப்பங்களும் பெறப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தாட்கோ தொழில்நுட்ப பிரிவில் 2 செயற்பொறியாளர் பணியிடம், 18 உதவி செயற்பொறியாளர் பணியிடம் மற்றும் 80 உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றினை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் அப்பணியிடங்கள் நிரப்பப்படும். தாட்கோ மூலம் சுமார் 600 கோடி மதிப்பீட்டிலான பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன.