சென்னை: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நல இயக்ககம் சார்பில், செம்மொழி பூங்கா முதல் தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகம் வரை விழிப்புணர்வு பேரணி இன்று (சனிக்கிழமை) நடத்தப்பட்டது. இந்த பேரணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
இதில், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் செவிலியர்கள் என ஏராளமானோர், மக்கள் தொகை குறைப்பதற்கான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர். பேரணியைத் தொடர்ந்து, தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதார இயக்குனரகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “குடும்ப நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் 1000க்கு 13.8 என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. இந்திய அளவில் பிறப்பு விகிதம் தமிழ்நாட்டில் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் சிசு மரணம் 1000க்கு 13 என்ற அளவில் குறைந்துள்ளது. சிசு மரணம் மற்றும் மகப்பேறு மரணம் பூஜியத்தை எட்டும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாடு அமைந்து வருகிறது.
யோகா பயிற்சி:தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு 4.11 லட்சம் பெண்களுக்கு கருத்தடை வளையங்கள் பொருத்தப்படுள்ளது. பெண்களின் மகப்பேரு காலங்களில் அறுவைசிகிச்சை மகப்பேறுக்கு பதிலாக சுகபிரசவம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழ யோகா பயிற்சிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்பட்டு வருகிறது.
மலை கிராமங்களில் இளம் வயது திருமணத்தை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 சதவீதம் இளம் வயது திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.