சென்னை:தமிழின் பிரபலயூடியூபர் மற்றும் ஃபுட் ரிவியூ விளாகரான இர்ஃபான் தனக்கு பெண் குழந்தை பிறந்ததை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டார். ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர்களுடன் இருந்த இர்பான் தனது மனைவிக்கு சி செக்ஷன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதை வீடியோவாக பதிவு செய்திருந்தார். அப்போது குழந்தையை வெளியே எடுத்ததும், நீங்கள் தொப்புள் கொடியை கட் செய்ய விரும்புகிறீர்களா? என மருத்துவர் கேட்பதும், இதனை கேட்டு ஸ்டெர்லைஸ் செய்யப்பட்ட கத்திரிக்கோல் மூலம் இர்பானே தொப்புள் கொடியை துண்டிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மருத்துவ விதிகளின்படி சுகப்பிரசவத்தின் போது மட்டுமே பெண்ணின் கணவரோ, தாயாரோ உடனிருக்க முடியும். இதற்கு மாறாக அறுவை சிகிச்சையின் போது இர்ஃபானையும், வீடியோ எடுக்கும் நபரையும் அனுமதித்தது எப்படி? என கேள்வி எழுப்பப்பட்டது. முன்னதாக கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து இர்ஃபான் வெளிப்படையாக அறிவித்ததும் சர்ச்சையில் சிக்கியது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இது தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதிலளித்த அவர், "இர்ஃபான் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்று மருத்துவர் அல்லாத ஒருவர் தொப்புள் கொடியை துண்டித்தது தேசிய மருத்துவச் சட்ட விதிகளை மீறியது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டப்படி நோட்டீஸ் கொடுத்துள்ளோம்" என்றார்.
மேலும், செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் மருத்துவத்துறை சார்பில் இர்ஃபான் மீது புகார் அளித்துள்ளோம் எனவும், தொப்புள் கொடியை அறுக்க அனுமதித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் புகார் தரப்பட்டுள்ளதாகக் கூறினார். அந்த மருத்துவர் மீது தமிழ்நாடு மருத்துவ இயக்குனரத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்த அமைச்சர் , அந்த மருத்துவர் பயிற்சி செய்வது தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாதகவும் குறிப்பிட்டார்.