சென்னை:சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் கருவி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் பல் மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கவுன்சிலிங் நடைபெற உள்ளது. வெளிப்படைத்தன்மையோடு இந்த கவுன்சிலிங் நடத்தப்படும் என தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.6.60 கோடி மதிப்பிலான எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் கருவி மக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “11 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த எம்ஆர்ஐ கருவியை விட தற்போது அமைத்துள்ள எம்ஆர்ஐ கருவி கூடுதல் சிறப்பாக உள்ளது. இந்த புதிய கருவி குறைந்த நேரத்தில் அதிக நோயாளிகளுக்கு ஸ்கேன் செய்ய முடியும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதால் தினமும் 40-க்கும் மேற்பட்டோர் ஸ்கேன் செய்து கொள்ள முடியும். மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி விரைவில் தொடங்கி வைக்கப்படும். ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் இதுவரை 127 புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் உட்பட 365 நபர்களுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளன.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி (ETV Bharat Tamil Nadu) இதே ரோபோடிக் அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகும். அறுவை சிகிச்சைக்கு உதவுகின்ற கருவிகள், எலும்பியல் மருத்துவத்திற்கு தேவையான மருத்துவ கருவிகள் என பல்வேறு அதிநவீன வசதிகளை இந்த மருத்துவமனையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காரணத்தினால், இந்த மருத்துவமனை மீது நோயாளிகளிளுக்கு நம்பிக்கை அதிகமாகி வருகிறது.
இதையும் படிங்க:கட்சி தொடங்கிய உடன் ஆட்சிக்கு வரத்துடிக்கிறார்கள்.... விஜய் மீது மு.க.ஸ்டாலின் மறைமுகத்தாக்கு!
கருவிகள் வாங்கும் போதே அந்த நிறுவனத்தின் மூலம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பல் மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கவுன்சிலிங் நடைபெற உள்ளது. வெளிப்படைத்தன்மையோடு இந்த கவுன்சிலிங் நடத்தப்படும். ஏற்கனவே வெளிப்படை தன்மையோடு கவுன்சில் நடத்தப்பட்டது. இதில் 34,000 மேற்பட்டவர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டது” என்றார்.
இதையடுத்து, ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா பற்றி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா கிராமங்களில், அடர்ந்த மரங்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில் காணப்படும் உன்னிகளால் பரவ கூடியவை. இந்த காய்ச்சல் திண்டுக்கல்லில் அதிகமாக பரவியிருக்கிறது. அதில் பாதிக்கப்பட்ட எட்டு பேரில் நான்கு பேருக்கு குணமடைந்துவிட்டது. இது வழக்கமாக வருவது தான். எனவே இதனைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களை அச்சத்தில் வைத்திருப்பதே எடப்பாடி பழனிசாமியின் வேலையாக மாறிவிட்டது” எனக் கூறினார்.