சென்னை: பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி பகுதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்ப தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை: சிட்லபாக்கம், சேலையூர், செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம், கீழ்கட்டளை, பல்லாவரம், நன்மங்கலம் உள்ளிட்ட 13 ஏரிகளில் இருந்து வரும் உபரி நீரை நாராயணபுரம் ஏரி தக்கவைக்கிறது. நாராயணபுரம் ஏரி நீர்மட்டம் உயரும்பொழுது குடியிருப்புகளுக்கும் புகுந்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. நீர்வளத்துறை சார்பில், ரூ. 44 கோடி செலவில் மழை நீர் வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கூடுதலாக ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற புதிய மழை நீர் வடிகால் நீர்வளத்துறை சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு 3 மாதங்களாகும் என்பதால், தற்காலிகமாக உபரி நீரை தொடர்ந்து வெளியேற்ற நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. புதிய கால்வாய் 10 அடி அகலம் 2.1 அடி ஆழம் கொண்ட கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க:"மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்" அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
முத்துலட்சுமி ரெட்டி திட்டம்:முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் முறைகேடு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இத்திட்டம் தொடர்பாக புதுக்கோட்டை பகுதியில் தணிக்கை குழு ஆய்வு செய்துள்ளனர். இதில், அங்குள்ள ஊழியர்கள் மகப்பேறு உதவி பெறும் பயனாளிகள் தொடர்பாக போலி தகவல்களை தயாரித்து, ரூ.18 லட்சத்து 60 ஆயிரம் வரை மோசடி செய்து 16 வங்கி கணக்குகளில் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.