சென்னை:தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது. இதில், சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து போட்டுத் துவக்கி வைத்தார்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது, “இதில், 5 வயதிற்கு உட்பட்ட 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு ஒரே நாளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. குடும்ப நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது.
தாய் - சேய் நலத் திட்டங்களுக்குத் தமிழ்நாட்டில் முன்னுரிமை வழங்கப்பட்டு மிகச் சிறப்பான வகையில் பாதிப்புகள் அற்ற தமிழ்நாடாக மீட்டெடுக்கும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறை, தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், 6 நோய்களைத் தடுக்கும் தடுப்பூசி திட்டத்தைத் தமிழக அரசு வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் 10 லட்சம் கர்ப்பிணி தாய்மார்களும், 9 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் தடுப்பூசியினால் பயன்பெற்று வருகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 99 சதவீதத் தடுப்பூசி என்பது பயன்பாட்டில் இருந்தது. ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் சார்பில் ரூ. 187 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களான ஆவடி, அம்மாபேட்டை உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனை கட்டிடங்களைத் திறந்து வைக்க இருக்கிறார். அந்த வகையில் நாளை டெல்டா மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், நாகப்பட்டினத்தில் ரூ.254 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 700 படுகைகளுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.