தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது; ஆக.21 முதல் கலந்தாய்வு தொடக்கம்! - medical counselling ranking list - MEDICAL COUNSELLING RANKING LIST

Medical Counselling Ranking List: மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு ஆக.21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், அரசு சார்பில் சைதாப்பேட்டையில் ஆரம்பிக்கப்பட்ட நீட் தேர்வு மையத்திலிருந்து, தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 4 அரசுப் பள்ளி மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட அமைச்சர்
தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 3:57 PM IST

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2024 - 25ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Paramedical) பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்து, தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

அமைச்சர் மா.சு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "2024 -25ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS), மருத்துவம் சார்ந்த (Paramedical) பட்டப் படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள நிர்வாக மருத்துவர் இடங்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 31 முதல் ஆக.9 வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன.

இந்தாண்டு 43,063 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 2,721 அதிகம். இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டிற்கு 3,733 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவில் 343 விண்ணப்பங்களும், முன்னாள் படை வீரர் பிரிவு ஒதுக்கீட்டில் 455 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 133 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 6,630 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள பிடிஎஸ் படிப்பில் 1,683 இடங்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் 496 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 126 இடங்களும் உள்ளன.

அரசின் ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 29,429 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 28,819 விண்ணப்பம் தகுதி பெற்றுள்ளது. அவர்களில் 10,704 மாணவர்களும், 18,114 மாணவிகளும், திருநங்கை ஒருவரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டிற்கு 3,733 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில், 3,683 மாணவர்கள் தகுதி பெற்றனர். அவர்களில் 1,041 மாணவர்களும், 2,642 மாணவிகளும் ஆவர். தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்வதற்கு 13,417 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டை விட 150 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அன்னை கல்லூரியில் 50 இடங்களும், கன்னியாகுமரி ஆராய்ச்சி மையத்தில் 100 இடங்களும் கூடுதலாக கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 9,200 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 2,150 இடங்கள் உள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளியில் படித்த ரூபிகா என்ற மாணவி 669 மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசு சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க தொடங்கப்பட்ட சைதாப்பேட்டை சீர்மிகு பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முதல் 10 பேரில் நான்கு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றத்திறனாளிகள் மற்றும் விளையாட்டுப் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு 22ம் தேதி ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் நேரடியாக கலந்தாய்வு நடைபெறும்.

திருநங்கை ஒருவரும் தேர்வாகி இருப்பதாகவும், அரசு ஒதுக்கீட்டில் அவருக்கு இடம் கிடைத்துள்ளதாகவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. நீட் தேர்விற்கு அகில இந்திய அளவில் எதிர்ப்புகள் கிளம்பி துவங்கி உள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று அகில இந்திய தலைவர்கள் கேட்டுள்ளனர். மாநில உரிமைகளை எப்போதும் திமுக விட்டு கொடுக்காது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களில் பொதுப் பிரிவு தரவரிசைப் பட்டியலில் 2023-24ம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் 7,791 பேரும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் படித்த மாணவர்கள் 21 ஆயிரத்து 25 பேரும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 2023-24 ம் கல்வியாண்டில் 472 மாணவர்களும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் படித்த மாணவர்கள் 3 ஆயிரத்து 309 பேரும் இடம் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றுள்ள 10 மாணவர்களும் 2023-24 ம் கல்வியாண்டிற்கு முந்தைய ஆண்டுகளில் படித்தவர்கள்.

அரசு மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக இடங்களை அதிகரிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம். அதன்படி 2025-26 ம் கல்வியாண்டில் கூடுதல் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டில் மேலும் 6 புதிய மருத்துவக்கல்லூரிகளை துவங்குவதற்கு நிதி கேட்டுள்ளோம். அதனை பெறுவதற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பொறுப்பேற்பு.. கடந்து வந்த பாதை! - Tamil Nadu chief secretary

ABOUT THE AUTHOR

...view details