ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட 20 படுக்கைகள் கொண்ட கட்டண அறைகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
அமைச்சர் மா.சு. பேட்டி (Image Credit - ETV Bharat Tamilnadu) இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவு, தாய்ப்பால் சேமிப்பு கிடங்கு, புற்றுநோய் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு போன்ற அனைத்து பகுதிகளிலும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், முத்துசாமி ஆய்வு நடத்தி உள் நோயாளிகளிடம் நிறை குறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது, “அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கை அறைகள் ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 16 மாவட்டங்களில், இது போன்ற கட்டண படுக்கை அறை வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஈரோடு அரசு மருத்துவமனையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் எம்ஆர்ஐ ஸ்கேன் வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனை செய்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு தேவையான கருவிகள் வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
புற்றுநோய் கண்டறியும் முகாம்:தமிழகத்தில் ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் சாயக்கழிவு, தோல் தொழிற்சாலை, ரப்பர் உற்பத்தி கழிவுகளால் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த 4 மாவட்டங்களில், 4 லட்சத்து 19ஆயிரத்து 143 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 176 பேருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதில், ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 473 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 11 பேரை பரிசோதனை செய்ததில், 3 ஆயிரத்து 39 பேர் புற்றுநோய் இருக்கலாம் என கண்டறியப்பட்டது. இதில், 50 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு அரசு சார்பில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும்.
காலிப்பணியிடங்கள்: கடந்த 4 மாதங்களுக்கு முன்னால், 1021 மருத்துவப் பணியிடங்கள், 977செவிலியர் பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்பட்டன. 986 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப கவுன்சிலிங் நாளை நடக்கவுள்ளது. 1066 சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக வழக்குகள் உள்ளன.
வழக்கு முடிந்தவுடன் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும். ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் போதுமான அளவு உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் 137 பேர் பணியில் உள்ளனர்.இவர்களை கூடுதலாக பணியில் அமர்த்தவும், அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்.
குழந்தைகள் கடத்தல்: குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எல்லா மருத்துவமனைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாமக்கல்லில் கிட்னி விற்பனை தொடர்பான புகாரில் சிக்கியவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கிட்னி விற்பனை தொடர்பான தகவல் இருந்தால் ரகசியமாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:"நாங்குநேரி சம்பவம் தொடர்பான அறிக்கையை பாஜக மட்டுமே நிராகரிக்கிறது"..நீதியரசர் சந்துரு விளாசல்! - ADVOCATE CHANDRU