சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் காலநிலை மாற்றம், மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த ஒரு நாள் கருத்தரங்கிற்கான மலரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "மெரினா விமான சாகசத்தின்போது இறப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தமிழ்நாடு அரசு கூறவில்லை. விமானப்படை சாகசத்தின்போது இறப்பு ஏற்பட்டது வருத்தத்திற்குரியது. இறந்தோருக்கு அனுதாபம் தெரிவித்து கொள்கிறோம். இதை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் தோற்று போய் விடுவர். உயிரிழந்த 5 நபர்களும் இறந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பலனின்றி யாரும் இறக்கவில்லை. 5 மரணமும் வெயிலின் தாக்கத்தாலே ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் நேற்று 102 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், கால் முறிவு, மூச்சுத் திணறல், குடலிறக்கம், செரிமான கோளாறு உள்ளிட்ட காரணங்களால் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
பொது மக்களுக்கு தேவையான அனைத்தை வசதிகளையும் அரசு செய்திருந்தது. மெரினாவுக்கே வராமல், பூதக் கண்ணாடி வைத்து குறை சொல்லும் சில நக்கீரர்கள்தான் அரசை குறை சொல்கின்றனர். தட்ப வெப்ப நிலையை பொறுத்து விமான சாகச நேரத்தை விமானப்படைதான் முடிவு செய்திருந்தது. விமானப்படையை குறைகூற முடியாது. வெயிலின் தாக்கம்தான் பாதிப்புகளுக்கு காரணம். கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை.
இறந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும். 15 லட்சம் பேர் கூடினாலும் சிறிய நெரிசல் கூட ஏற்படவில்லை. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். 5 பேர் இறந்ததற்கு வெயில்தான் காரணம் கூட்ட நெரிசலில் யாரும் இறக்கவில்லை" என்று தெரிவித்தார்.