மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி சென்னை:சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவு தொடங்குவதற்கு ரூ.15 கோடி செலவில் கட்டப்படவுள்ள கட்டடத்திற்கான அடிக்கல்லை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை பழமை வாய்ந்த மருத்துவமனையாக இருக்கிறது. சைதாப்பேட்டை மட்டுமின்றி சுற்றி உள்ள பகுதிகளிலிருந்து வந்து மருத்துவம் பெற்ற பழமையான மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பூர்த்தி செய்யும் என எதிர்பார்ப்பு:இந்த மருத்துவமனைக்குக் கூடுதல் வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்தது. தற்போது இந்த மருத்துவமனையில் ஒவ்வொரு வசதியாகச் செய்யப்பட்டு வருகிறது. எக்ஸ்ரே மற்றும் 13 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், ரூ.11 கோடி செலவில் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய கட்டடம் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டு, தற்போது 80 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.
புதிய பேறுகால பச்சிளம் குழந்தை சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பட்டது. அதற்கேற்ப ரூ.15 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 7 மாதத்தில் முடிவுற்று தருணம் மற்றும் ஆறு தளங்களுடன் கூடிய பிரம்மாண்டமான கட்டடம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்த கட்டடத்தில் 115 படுக்கை வசதிகள், தீவிர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் அறை மருத்துவர்களுக்கான அறைகள், அறுவை சிகிச்சை அறை, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டு போன்றவை துவக்கி வைக்கப்பட உள்ளன. ரூ.26 கோடியே 50 லட்சம் மதிப்பிலான கட்டடம் சைதாப்பேட்டை புறநகர் அரசு மருத்துவமனையில் தேவைகளை 100 சதவீதம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
எந்த துறையிலும் இல்லாத வகையில் பணி நியமனம்: மக்கள் நல்வாழ்வுத்துறையைப் பொறுத்தவரை காலி பணியிடங்கள் தொடர்ச்சியாக நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் காலி பணியிடங்களைத் தொடர்ச்சியாக நிரப்பி வருகிறோம். கடந்த இரண்டு மாதங்களில் 1,021 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணி புரிந்து வருகின்றனர்.
அதேபோல் கரோனா காலத்தில் பணியாற்றிய எம்ஆர்பி செவிலியர்கள் 977 பேருக்குப் பணி ஆணைகள் தரப்பட்டது. அவர்களும் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் 332 ஆய்வக நுட்புனர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுப் பணி புரிந்து வருகின்றனர். இந்திய வரலாற்றில் வேறு எந்த துறையிலும் இல்லாத வகையில் முதலில் பணிக்கு வருபவர்களுக்கு, வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2015ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 13 பேர் செவிலியர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் காலி பணியிடங்கள் உருவாகும் போது இவர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இப்பொழுது காலி பணியிடங்கள் 483 கண்டறியப்பட்டு அந்த பணியிடங்களுக்கு நாளை காலை 10 மணிக்கு நிரந்தர பணியிடத்தில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.
2019ஆம் ஆண்டிற்குப் பிறகு கரோனா காலத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். அதில், ஏற்கனவே மாவட்ட சுகாதார சங்கங்களின் மூலம் பலர் பணி நியமனம் பெற்றுள்ளனர். மேலும் ஒரு மாதத்திற்கு முன்னர் 977 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இந்த ஆண்டு காலிப்பணியிடங்களாக 713 பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே எம்ஆர்பி செவிலியர்கள் 713 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாளை 1,196 பேருக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட உள்ளது.
கோபி மஞ்சூரியன் தமிழ்நாட்டிலும் தடையா?:கோபி மஞ்சூரியன் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் தடை செய்கிறார்கள் என்பதால் தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டியது இல்லை. தமிழ்நாட்டில் குட்கா பான்பிராக் தடை செய்து சோதனை செய்து வருகிறோம். ஆனால் கர்நாடகாவில் இன்னும் தடை செய்யவில்லை. அதனால் எதைத் தடை செய்ய வேண்டுமோ, அதனைத் தடை செய்வோம்.
உணவு பாதுகாப்புத்துறை எதில் கெடுதல் உள்ளதோ, அதனை நிச்சயம் தடை செய்வோம். பஞ்சு மிட்டாயில் கெடுதல் உள்ளது என்பதால் அதனைத் தடை செய்துள்ளோம். உடலுக்குத் தீங்கு விளைவிப்பது போதை வஸ்திகள் இதற்கு நாம் தொடர்ச்சியாகத் தடை விதித்து வருகிறோம். கர்நாடகாவில் தடை விதிக்கவில்லை.
ஆளுநருக்கு சவால்:ஆளுநர் தினமும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் போதை வஸ்துகள் நடமாட்டத்தை முழுமையாகக் குறைத்துக் குறிப்பாகவும் சிறப்பாகவும் இளைஞர்களுக்குத் தொடர்ச்சியாக மாணவர்களுக்கும் கின்னஸ் சாதனை அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். விழிப்புணர்வு ஏற்படுத்தி கின்னஸ் சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரி மகேஷ் அகர்வால் தென்னிந்திய மண்டல காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் ஆந்திராவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கஞ்சா பயிரிடப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி அழிக்க வேண்டும் எனக் கூறினார். அதனால் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான கஞ்சாவை அழித்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை அதிகாரி கூறியதால் ஆந்திராவில் அழித்தார்கள். தமிழ்நாட்டில் கஞ்சா எங்கும் பயிரிடப்படவில்லை என்ற நிலை இருக்கிறது.
அதில் ஆளுநருக்கு சந்தேகம் இருந்து ஒரு சென்ட், அரை செண்டில் கஞ்சா பயிரிடப்பட்டு இருந்தால், அவர் அதைக் காட்டலாம். ஜீரோ டிகிரி பயிரிடப்படாத நிலையில், ஆளுநர் அரசியலுக்காகப் பேசும் விஷயங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை. திமுக எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாது. அமைச்சர் தாமோ அன்பரசன் மீது போடப்பட்டுள்ள வழக்கை முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு எதிர்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி.. கன்னியாகுமரியில் ஏற்பாடுகள் தீவிரம்!