தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 3:32 PM IST

ETV Bharat / state

ஒரு மாதக் காலத்திற்குள் 5,100 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

Govt Lab technician job: மருத்துவத்துறையில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 100 பணியிடங்கள் எதிர்வரும் ஒரு மாதக் காலத்தில் நிரப்புவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன்

சென்னை:மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 332 அரசு ஆரம்பச் சுகாதார நிலைய ஆய்வக நுட்புநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, இன்று (பிப்.22) ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக நுட்புநர் பணிநியமன ஆணையினை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB-Medical Services Recruitment Board) மூலமாக 1,021 மருத்துவர் பணியிடங்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த 1,021 மருத்துவர்களும் 15 நாட்கள் கால அவகாசத்திற்குள் பணியில் சேரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில், 90 சதவிகிதத்திற்கும் மேலான மருத்துவர்கள் தற்போது பணியிடங்களுக்குச் சென்று பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போன்று, கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி, 977 செவிலியர்களுக்கான (Nurse) பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு, 15 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டது. இவர்களில், இதுவரை ஏறத்தாழ 50 சதவிகித செவிலியர்கள் பணியில் சேர்ந்து பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து, ஆய்வக நுட்புநர்கள் பணியிடங்கள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் எடுத்து, அதன் பட்டியலை பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரிடம் தரப்பட்டது. இந்தியாவிலேயே முதல்முறையாக, பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகத்தின் கீழ் 332 ஆய்வக நுட்புநர்களுக்கு (நிலை-3) காலி இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நேற்று (பிப்.21) நடத்தப்பட்டது. இதில், அவர்கள் விரும்புகிற இடங்களுக்குத் தேர்வு செய்து பணிநியமன ஆணைகள் பெற்றிருக்கின்றனர். கடந்த 20 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

மேலும், 2 ஆயிரத்து 250 கிராம சுகாதாரச் செவிலியர்கள், 986 மருந்தாளுநர்கள் (Pharmacist), 1,066 சுகாதார ஆய்வாளர்கள் (Health inspectors) மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 798 என மொத்தம் 5 ஆயிரத்து 100 பேரைத் தேர்வு செய்வதற்குரிய பணிகளை மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் (MRB) செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், எதிர்வரும் ஒரு மாதக் காலத்திற்குள் மருத்துவத்துறையில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 100 பணியிடங்கள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப. பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.இளங்கோ மகேஸ்வரன், பொதுச்சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள்,
துணை இயக்குநர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வக நுட்புனர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் ரூ.27 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details