தஞ்சாவூர்:மத்திய அரசின் யுஜிசி வரைவு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சாவூரில் கல்லூரி மாணவர்கள் இமெயில் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று (30.1.25) நடைபெற்றது. தனியார் கம்யூட்டர் நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு யுஜிசி வரைவு சட்ட திருத்தத்தின் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துக் கூறினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், "பல்கலைக்கழக துணைவேந்தர்களாக கல்வியாளர் தான் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலைபாட்டினை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால் இப்போது யுஜிசியின் வரைவு சட்டத்தின்படி பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக கல்வியாளர் அல்லாதவரும் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். துணைவேந்தர் தேடுதல் குழுவில் கூட மாநில அரசு நினைத்தால் ஒரு பிரதிநிதியை நியமிக்க முடியாத சூழல் உள்ளது. இந்த சர்வாதிகாரப் போக்கு அகற்றப்பட வேண்டும் என்பதால் தான் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து தான் ஆந்திரா, பஞ்சாப், கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களில் துணைவேந்தர் நியமன விவகாரம் பேசு பொருளாக மாறியிருக்கிறது.