திருச்சி:தமிழக முதல்வர் கடந்த மாதம் மாவட்டம் வாரியாக கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 245 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை சென்னையில் வழங்கினார். அதில், திருச்சி மாவட்டத்திற்கு என மொத்தம் 9 ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ ஊர்தி சேவையை, இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, அந்தந்த பகுதிகளுக்கு ஊர்திகள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஊர்தியில் ஓட்டுநர், உதவியாளர், மருத்துவர் என மூன்று பேர் இடம்பெற்றுள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மருத்துவ ஊர்தி மூலம் கால்நடைகளுக்கான மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் பணிகள் நடப்பதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் ரயில்வே நிர்வாகத்திடமிருந்து சில அனுமதிகள் பெற வேண்டும் என்பதால், அது காலதாமதம் ஆகிறது. தமிழக அரசு பாலத்தைக் கட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். இது குறித்து ரயில்வே கோட்ட மேலாளரிடம் மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார், விரைவில் பணிகள் முடிக்கப்படும்.
இந்த மாதம் புதிய பேருந்து முனையம் தொடங்குவதாக கூறி கால அவகாசம் கொடுத்திருந்தோம். ஆனால், கூடுதலாக 100 கோடி ரூபாய்க்கான ரிவைஸ்டு எஸ்டிமேட் போடப்பட்டு, அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அதில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, உணவகங்கள் போன்றவை இருக்கும் வகையில், டிசம்பருக்குள் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி மழைநீர் அகற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடக்க உள்ளது. இதுவரை சென்னை மாநகராட்சியில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரங்களினால் மழைநீர் கால்வாய் மூலம் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.