விழுப்புரம்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சுட்டெரிக்கும் சித்திரை வெயிலின் நடுவில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிடும் துரை ரவிக்குமார் அவர்களை ஆதரித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டு வருகிறார். காலை 7 மணிக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இரவு 10 மணி வரை விழுப்புரம் தொகுதி முழுவதும் வீதி வீதியாக மக்களைச் சந்தித்து அங்குள்ள சிறுவர்களுடன் கலந்து உரையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், விழுப்புரம் தனித் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி விசிக வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் க.பொன்முடி தீவிர வாக்கு சேகரித்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக, அவருடன் அவரின் மகன் பொன் கௌதம் சிகாமணி மற்றும் திமுக, விசிக எனக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த வாக்கு சேகரிப்பில் மற்ற தொகுதிகளைக் காட்டிலும், விழுப்புரம் தொகுதி தனித்து விளங்குவதாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம், அமைச்சர் பொன்முடி, கடந்த 30 ஆண்டுகளாக 'உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க..' என விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர், அமைச்சர் பொன்முடி.
இதையும் படிங்க:பள்ளியில் காலை உணவு எப்படி இருக்கு? - சிறுமியிடம் கேட்டறிந்த அமைச்சர் பொன்முடி! - Lok Sabha Election 2024
இவர், தற்போது நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கூட்டணிக் கட்சி விசிக-வை ஆதரித்து 'பானை' சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள் என்று விழுப்புரம் தொகுதி முழுவதிலும் பம்பரமாகச் சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார். அதிலும் நேற்று கண்டாச்சிபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தபோது, கையில் பானையுடன், 'போடுங்கம்மா ஓட்டுப் பானை சின்னத்தைப் பார்த்து..' எனப் பாட்டுப் பாடி வாக்கு சேகரித்தார்.
அதுமட்டுமின்றி அங்கே கூட்டத்திற்கு வந்த பள்ளிச் சிறுவர்களிடம், 'நீ என்ன படிக்கிறாய்? காலையில் டிபன் சாப்டியா? டிபன் யார் போடச் சொன்னது.. ஸ்கூல்ல..? அது நம்ம தளபதி. நம்முடைய தமிழக முதல்வர். அவர் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; ஆண் பிள்ளை என உங்களுக்கும் மாதம் ரூ.1,000 நம்ம தமிழக முதல்வர் கொடுக்கிறார்' என்று கூறினார். மேலும் பேசிய அமைச்சர் பொன்முடி, 'ஆகவே, அனைவரும் படிக்க வேண்டும். குழந்தைகளிடம் நம் சின்னம் என்ன? என்று கேட்க குழந்தை, 'பானை' என்று பதிலளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல பிரச்சாரத்தின் போது பெண்கல்வி, சமத்துவம் உள்ளிட்டவை குறித்து பெரியார், அண்ணாதுரை ஆகிய தலைவர்களின் அறிவுரைகளை மக்களிடம் எடுத்துக் கூறி வருகிறார். அதேநேரத்தில், பெண்களின் கல்வி, அனைவரும் சமம் எனவும் இதை வலியுறுத்துவதே திராவிடம் எனவும் கூறி வருகிறார். இதனை ஏற்காத பாஜகவுடன் தான், பாமக இப்போது கூட்டணி வைத்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
அமலாக்கத்துறை ரெய்டு, செம்மண் குவாரி வழக்கு உள்ளிட்ட வழக்குகளை எதிர்கொண்டு வரும் அமைச்சர் பொன்முடிக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் மற்றொரு சவாலாக இருக்கும் எனத் தெரியவருகிறது. இதனிடையே, மாஜி அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக வேட்பாளர் ஜெ.பாக்யராஜிற்கு ஆதரவாகத் தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் நிலையில், விழுப்புரம் தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை வெற்றி பெற வைப்பதனால், தனக்குள்ள பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அமைச்சர் பொன்முடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், விக்கிரவாண்டி எம்எல்ஏ-வாக இருந்த புகழேந்தியின் மறைந்ததை அடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்கான வேலைகளிலும் அமைச்சர் பொன்முடி தீவிரமாக ஈடுபடுவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும், இதன் மூலம் விழுப்புரம் தொகுதியைத் தனது கோட்டையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:"ஜிஎஸ்டியால் பின்நோக்கி சென்ற திருப்பூர் ஜவுளித் தொழில்" - திருப்பூர் கூட்டத்தில் மத்திய அமைச்சருக்கு கமல்ஹாசன் எழுப்பிய கேள்வி! - Lok Sabha Election 2024