சென்னை:சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் கீழ் இருக்கும் 13 பல்கலைக்கழகங்களில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்னாதன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, கொடைக்கானல் அன்னை தெரேசா பல்கலைக்கழக துணை வேந்தர் கலா, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம், சென்னை திறந்த நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம். ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் சென்னை, மதுரைக் காமராஜர், பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்கள் இல்லாத காரணத்தால் அந்த பல்கலைகழகத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர்கள் கலந்து கொண்டனர். இதில் உயர் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ், தொழில்நுட்பக் கல்வி இயக்க ஆணையர் ஆப்ரகாம், கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் உள்ளிட்ட உயர்கல்வித்துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி பற்றாக்குறை குறித்து துணைவேந்தர்கள், அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் மற்றும் தணிக்கை தொடர்பான விபரங்களையும் உயர்கல்வித்துறை அமைச்சரிடம் வழங்கினர். இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நிதிப் பற்றாக்குறையை களைவது குறித்தும், தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை சரி செய்வது குறித்தும் தீவிரமாக விவாதித்தார்.