திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "நிறைய பேர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். 1973-ல் எம்ஜிஆரையே பார்த்துவிட்டு தான் திமுக வந்திருக்கிறது. திமுக பனங்காட்டு நரி, யாருக்கும் அஞ்சாது. எல்லா அரசியல் போராட்டங்களையும் சந்தித்த ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
75 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறோம், இப்பொழுது சொல்கிறேன், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காக உழைக்கக்கூடிய இயக்கமாக மற்றும் மக்களுக்காக போராடக்கூடிய தலைவர்களைக் கொண்ட இயக்கமாக திமுக இருக்கும்.
அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் சந்தோசம், மகிழ்ச்சி. ஒருவர் புதிதாக அரசியல் கட்சி தொடங்குவதால் எங்களுக்கு கஷ்டம் வரப்போவதில்லை. எங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. மக்கள் எங்களது பக்கம் இருக்கிறார்கள். எங்களது பணி தொய்வில்லாமல் இன்னும் வேகமாக நடக்கும்.
பெரியாரின் திராவிட மாடலையும், ஒரு காலத்தில் காங்கிரஸ், காமராஜர் மற்றும் அப்போது இருந்த தலைவர்கள் அனைவரும் சோசியலிசத்தையும் பேசினார்கள். இதை குறையாக கூறவில்லை. ஆனால், அவர்கள் சமத்துவம் என்ற சோசியலிசத்தை நாடு சுதந்திரம் அடைந்த பின்னால் கொண்டு வருவோம் எனக் கூறினார்கள். தற்போது வரை மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை.