திண்டுக்கல்:நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் பலரும் தங்களது தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் சுமூகமாக தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுங்கீடு செய்யப்பட்டது.
இதில் திண்டுக்கல் தொகுதியில் ஆர்.சச்சிதானந்தம் போட்டியிடுகிறார், அதே போல் மதுரை தொகுதியில் சிட்டிங் எம்பியான சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், கூட்டணிக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து சு.வெங்கடேசன் மற்றும் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் வாழ்த்துக்கள் பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திண்டுக்கல் வருகை தந்த வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், "திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திண்டுக்கல் தொகுதி வெற்றி பெறும்.