கோயம்புத்தூர்:தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் உயர் கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வுக் கூட்டம் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (நவ.22) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, உயர் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது தலைமை உரை ஆற்றிய அமைச்சர் கோவி. செழியன், "நான் பொறுப்பேற்றதிலிருந்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு உயர்கல்வி துறையை இன்னும் சிறந்த துறையாக உயர்நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி வருகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 மண்டலங்களாகப் பிரித்து நான்கு பகுதிகளிலும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகங்களின் உறுப்புக்கல்லூரிகள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதி கல்லூரி என உயர்கல்வி துறையின் அனைத்து அம்சங்கள் அடங்கிய அனைத்து நிர்வாகங்களின் அதிகாரிகள், அலுவலர்கள், பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் என அனைவரின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் கேட்டு, இந்த துறையை இன்னும் சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த கூட்டத்தை நடத்தி வருகிறோம்.
உச்சத்தில் உயர் கல்வித்துறை: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் இருக்கிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு மருத்துவத்துறை விளையாட்டுத் துறை, தொழில்துறை என அனைத்து துறைகளும் உச்சக்கட்டத்தில் இருந்தாலும் கூட, உயர்கல்வி துறையை இன்னும் உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முதலமைச்சரின் எண்ணத்தை ஈடேற்றுகின்ற வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.