சென்னை:இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக உயர் கல்விக்காக வங்கதேசம் சென்றிருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ மாணவிகள் அங்கு சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில், தமிழர் நலன் மற்றும் அயல் நாடுகளில் வாழும் தமிழர்களின் மறுவாழ்வு ஆணையரகம், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டது.
இதற்காக சிறப்பு வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டு அந்த குழுக்கள் மூலம், வங்கதேசத்தில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து, முதற்கட்டமாக 49 மாணவ மாணவிகள் வங்கதேசத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர், அங்கிருந்து இந்தியாவின் அசாம் மாநிலம் கவுகாத்தி நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கவுகாத்தி நகரில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் 18 பேரும், இரவு 9.30 மணிக்கு சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில் 21 பேரும் என மொத்தம் 49 மாணவ மாணவிகள் சென்னை வந்து சேர்ந்தனர். அப்படி, சென்னை வந்தடைந்த மாணவ மாணவிகளை தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், மாணவர்கள் அனைவரும் அவரவர்கள் ஊர்களுக்கு தமிழ்நாடு அரசின் செலவில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாணவர்களின் விவரம்:
- கிருஷ்ணகிரி - 12
- கடலூர் - 6
- தருமபுரி - 5
- தஞ்சாவூர் - 5
- சேலம் - 3
- வேலூர் - 2
- ராணிப்பேட்டை - 2
- மதுரை - 2
- சென்னை - 2
- விருதுநகர் - 2
- ஈரோடு - 1
- திருவள்ளூர் - 1
- விழுப்புரம் - 1
- தென்காசி - 1
- திருவண்ணாமலை - 1
- தூத்துக்குடி - 1
- காஞ்சிபுரம் - 1
- மயிலாடுதுறை - 1 என மொத்தம் 49 பேர்.
முன்னதாக செய்தியாளரைச் சந்தித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "வங்கதேசத்தில் பதற்றமான சூல்நிலை நிலவி வருவதால், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வங்கதேசம் சென்ற மாணவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் மீட்கும் பணி நடந்து வருகிறது, அந்த வகையில், தற்போது முதற்கட்டமாக 49 மாணவர்கள் பத்திரமாக தற்போது தமிழகம் வந்துள்ளனர்.
இரண்டாம் கட்டமாக 77 மாணவர்கள் தமிழ்நாடு வர விருப்பம் தெரிவித்துள்ளார்கள். மேலும், அங்குள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக கட்டணம் இல்லாத தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு உணவு கிடைக்காத மாணவர்களுக்கு உணவு கிடைக்கவும் துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.