தூத்துக்குடி: தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 6 சட்டமன்றத்தை உள்ளடக்கிய தொகுதி, தூத்துக்குடி மக்களவை தொகுதி. இதில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 26 வாக்காளர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 260 வாக்குச்சாவடிகளில், 2 லட்சத்து 10 ஆயிரத்து 578 வாக்காளர்களும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 286 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 848 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.
மேலும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 265 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 18 வாக்காளர்களும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 620 வாக்காளர்களும், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 262 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 340 வாக்காளர்கள் என மொத்தம் ஆயிரத்து 624 வாக்குச்சாவடிகளில் 14 லட்சத்து 58 ஆயிரத்து 430 வாக்காளர்கள் என இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
இதில், 7 லட்சத்து 8 ஆயிரத்து 244 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 39 ஆயிரத்து 720 பெண் வாக்காளர்களும், 10 ஆயிரத்து 251 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 215 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்களிக்கின்றனர். இதுதவிர இளம் வாக்காளர்கள் 11 ஆயிரத்து 983 பேரும் இடம்பெற்றுள்ளனர். இதில், 288 பதற்றமான வாக்குச்சாவடி உட்பட மொத்தம் ஆயிரத்து 57 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா (Webcam) வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அந்த வகையில், வாக்குப்பதிவு முழுவதும் பதிவு செய்து, மாவட்ட அட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 மாற்று ஆவணங்களை கொண்டு வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆயிரத்து 624 வாக்குச்சாவடிகளில், வாக்காளர்களுக்கான அடிப்படை வசதியான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வுதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவரும் எளிதில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும் பொருட்டு, அவர்களது வீட்டிலிருந்து வாக்களிக்கும் மையத்திற்கு அழைத்து சென்றுவர இலவச வாகன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.