தூத்துக்குடி : தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் அண்ணாநகர், பிரையண்ட்நகர் பகுதிகள் சந்திக்கும் இடத்தில் வி.வி.டி. சிக்னல் அமைந்துள்ளது. இந்த சிக்னல் அருகே அரசு ஆஸ்பத்திரியும் இருக்கிறது. இதனால் அந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் சிரமப்படுகிறார்கள்.
இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக வி.வி.டி.சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்தது. அதன்படி, அந்த பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அங்குள்ள வியாபாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆகவே பணிகள் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் பகுதியில் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பாலங்கள் உடைந்தது. இதில், மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடியாக நெடுஞ்சாலைத் துறை மூலமாக 13 நாட்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ரூ.140 கோடி பணம் ஒதுக்கப்பட்டு தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 83 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, ரூ.110 கோடி பணம் ஒதுக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. இன்னும் 46 பணிகள் டிசம்பருக்குள் முடிவடையும். அதில், ஏரல் மேம்பாலம் டெண்டர் விடப்பட்டு இம்மாதத்திற்குள் முடிவடைந்து விடும்.