விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் அன்னியூா் சிவாவை ஆதரித்து, காணை ஒன்றியத்துக்குட்பட்ட டி.கொசப்பாளையத்தில் நேற்று செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "தமிழ்நாட்டில் மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் அனைத்துத் தரப்பினருக்குமான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த ஆட்சியின் சாதனைகளை வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று எடுத்துக் கூறி, திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரிக்க வேண்டும்.
இன்றைக்கு நமக்கு எதிரி அதிமுக அல்ல, பாஜக தலைமையிலான கூட்டணிதான் என்பதை உணர்ந்து இந்தியா கூட்டணியினா் தேர்தல் பணியாற்ற வேண்டும். திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுபவர்கள் வைப்புத் தொகை இழக்கும் வகையில் தோ்தலில் பணியாற்றி, அதிகளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். தாங்கள் பொறுப்பாளராக இருந்து பணியாற்றும் வாக்குப் பதிவு மையங்களில், அதிகளவிலான வாக்குகளை பெற்றுத் தருபவர்களுக்கு முதலமைச்சர் கையால் தங்கச்சங்கிலி அணிவிக்கப்படும் என்றார்.