கோயம்புத்தூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோவை நாடாளுமன்றத் தொகுதியில், இந்தியா கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மசக்காளிபாளையம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது கூட்டத்தில் பேசிய அவர், “இரவு நேர தேர்தல் பிரச்சாரத்தில் பூச்சி பட்டு ஒளியை பார்க்க முடியாத நிலையால், மருத்துவரின் ஆலோசனைப்படி கருப்பு கண்ணாடி அணிந்துள்ளேன். மேலும், எனக்கு கருணாநிதியை பிடிப்பதாலும் கருப்பு கண்ணாடி அணிந்துள்ளேன். பெண்கள் படிக்கும் முறை கருணாநிதி காலத்தில் துவங்கியது. புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் என உலகத்திற்கு வழிகாட்டும் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்து வருகிறார்.
கோவையில், சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் ரூ.998 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்கள் ரூ.172 கோடி திட்ட மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக ரூ.6 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடன் வைத்துவிட்டு போன நிலையிலும், திமுக அரசு இத்தகைய பணிகளை மக்களுக்கு கொடுத்துள்ளது.
2014ஆம் ஆண்டு இருந்த அரிசி, பருப்பு, தங்கம் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 வசூல் செய்து ரூ.29 குறைவாக தரப்படுகிறது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் குறைந்த வரி வசூல் செய்து அதிகளவில் கொடுக்கப்படுகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி கேட்டிருந்தோம். ஆனால், இதுவரை மத்திய அரசு நிதி வழங்கவில்லை.
குஜராத்தில் படேல் சிலை ரூ.3 ஆயிரம் கோடி, ரூ.800 கோடியில் மைதானம், ரூ.960 கோடியில் புதிய நாடாளுமன்றம் கட்டியுள்ளனர். பிரதமர் தமிழ் மொழியை பாராட்டுகிறார். தமிழை தனக்கு பிடித்த மொழி என்கிறார். தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கலாம் அல்லவா? ரூ.643 கோடி சமஸ்கிருதம் மொழியின் வளர்ச்சிக்கு ஒதுக்கியுள்ளனர். ஆனால், ரூ.2 கோடி மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 17 பொது நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். ஆனால், மோடி ஒரு பொது நிறுவனத்தை கூட உருவாக்கவில்லை. மாறாக, 27 தனியார் நிறுவனங்களை உருவாக்கினார். ரூ.2.1 கோடி மதிப்பிலான நிறுவனங்கள் மூடப்பட்டு, 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு போயுள்ளது. டிரெய்லர் ஆட்சியில் வேலைவாய்ப்பு இல்லை, நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. டிரெய்லரே இப்படி என்றால், 2.5 மணி நேர காட்சி காண்பிக்க முடியுமா?
மின்சாரக் கட்டணத்தை குறைக்க மாநில அரசால் முடியுமா? உதய் திட்டத்துற்கு முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஒப்புக்கொள்ளவில்லை. எடப்பாடி மற்றும் தங்கமணி ஆகியோரால் கையெழுத்து போடப்பட்டது. தமிழ்நாடு அரசு சிக்கிக்கொள்வதற்கு காரணம் எடப்பாடி. இலங்கை அரசால் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
10 ஆண்டு ஆட்சி செய்துள்ள பிரதமர் மோடி ஆட்சியில் என்ன விடியல் கண்டீர்கள்? இந்தியா சுதந்திரம் கிடைக்க இந்துக்களுடன் இணைந்து இஸ்லாமியர்கள் போராடினார்கள். ஆனால், சி.ஏ.ஏ சட்டத்தால் இந்த உறவுகளிக்கிடையே விரிசல் விழும் என்பதால், அதற்கு எதிராக வாக்களித்தோம். எங்களுடன் இணைந்து அதிமுக, பாமக வாக்களித்திருந்தால் அச்சட்டம் நிறைவேற்றபட்டிருக்காது. மறைமுகமா மத்திய அரசுக்கு உதவும் வகையில், எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:நல்லத்துக்குடி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டமா? கால்தடத்தால் ஏற்பட்ட பதற்றம்! - Leopard Movement In Mayiladuthurai