வேலூர் :வேலூர் மாவட்டம், பொன்னை அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இன்று 209 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழகத்தில் கல்விக்காக கோடிக்கணக்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதனை பயன்படுத்தி மாணவர்கள் நன்கு பயின்று பல துறைகளில் முன்னேற்றம் காண வேண்டும். அரசு சுகாதாரம், சாலை, பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது. அதனால் மாணவர்கள் இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு படிப்பதில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் கல்விக்காக அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதால் தான் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பல துறைகளில் சிறந்து விளங்கி, இன்றைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டடங்கள், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாணவர்களைக் கவரும் வகையில் இருந்தால் தான், மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு ஆர்வமாக இருப்பார்கள்.