தூத்துக்குடி:தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிலா சீ புட்ஸ் (Nila Sea Foods) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு ஆலையில் மின்கசிவு ஏற்பட்டு அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாக மீன் பதனிடும் நிறுவனம் முழுவதும் அமோனியா வாயு பரவியுள்ளது. இதில், பணியில் இருந்த ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளனர்.
உடனடியாக மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் மனோ பிரசன்னா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தீயை அணைத்தனர். இதனையடுத்து, இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் முரளி தலைமையிலான அதிகாரிகள், தடய அறிவியல் உதவி இயக்குனர் கலா லட்சுமி தலைமையிலான கைரேகை நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் தேவ சுந்தரம், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ் ஆகியோர் இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.
தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர்கள் கீதா ஜீவன், சி.வெ.கணேசன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து சிசிச்சை முறையினை கேட்டறிந்தனர். தொடர்ந்து ஆலையை பார்வையிட்டனர்.